சென்னை, அக்.17 மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழ்நாட்டில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில், செய்தியாளா்களிடம் அவா் நேற்று (16.10.2024) கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி 2 நாள்கள்தான் ஆகிறது. இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 44 செ.மீ. ஆனால், அதில் பாதி அளவான சுமார் 20 முதல் 25 செ.மீ. வரையிலான மழைப் பொழிவு சென்னையில் மட்டும் பதிவாகியுள்ளது.
இருந்தபோதிலும், முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, மழைக்கால நிவாரணப் பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த 15.10.2024 அன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 1,293 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதில் 78 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். அவா்களில் 6 ஆயிரம் போ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவா். அதன் தொடா்ச்சியாக மழை பாதிப்பு இருக்கும் இடத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை முடியும் வரை எப்போதெல்லாம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றார் அவா்.
தமிழ்நாடு முழுதும் தீயணைப்பு படையினரால் 200க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன
சென்னை, அக்.17 தமிழ்நாடு முழுவதும் 15.10.2024 அன்று பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்ணும் தீயணைப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் 15.10.2024 அன்று பெய்தமழையில் மாநிலம் முழுவதும் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புகட்டுப்பாட்டு அறைக்கு, பாம்புகளை பிடிக்க வேண்டும் என்றவகையில் மட்டும் 211 அழைப்புகள் பெறப்பட்டன.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற 2 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு பிராந்தியத்தில் இருந்து மட்டும் 43 அழைப்புகள் பதிவாகியிருந்தன. இவ்வாறு பெறப்பட்ட அழைப்புகளின் பேரில் நிகழ்வு இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மழைநீரில் அடித்துவரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பாம்புகளை பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடனும் நவீன கருவிகளை பயன்படுத்தியும் பிடித்தனர்.
அதேபோல கடந்த 2 நாட்களில்பெய்த இடைவிடாத மழையில் மொத்தம் 14 மரங்கள் வேரோடுசாய்ந்தன. இவற்றை தீயணைப்புத்துறை வீரர்கள் காவல் துறையுடன் இணைந்து உடனடியாக அகற்றினர். இதுதவிர 16 தீயணைப்புக்கான அழைப்புகளும், 74 மீட்பு அழைப்புகளும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரவலாக பெய்த பெரும் மழையால் நீர்த்தேக்கங்களில் 60 விழுக்காடு நீர் இருப்பு
சென்னை, அக்.17 தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக் கங்களில் சுமார் 60 சதவீதம் நீர்இருப்பு உள்ளது.
38 மாவட்டங்களில் உள்ள மொத்த ஏரிகளில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண் காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்களில் உள்ள நீர்இருப்பு குறித்து நீர்வள ஆதாரத் துறை தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24,927 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 33,661 மில்லியன் கனஅடி (59.59 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,139 குளங்கள் உள்ளன. இவற்றில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அதில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 310 குளங்கள் நிரம்பியுள்ளன. 1,832 குளங்களில் 99 சதவீதமும், 2,096 குளங்களில் 51 முதல் 75 சதவீதமும், 2,801 குளங்களில் 26 முதல் 50 சதவீதமும், 4,949 குளங்களில் ஒன்று முதல் 25 சதவீதமும் நீர்இருப்பு உள்ளது. 1,570 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவ்வாறு நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.