துர்கா பூஜை ஊர்வலத்தில் மோதல்!
லக்னோ, அக்.15 பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஹார்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹாசியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
30–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் தடையை மீறிச்சென்று வன்முறையில் ஈடுபட்டனர். இதனால். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மாவட்ட உயர் அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு மேல் சென்று காவிக்கொடி ஏற்றிய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அடுத்து பயங்கர வன்முறை வெடித்தது. பஹ்ரைச் மற்றும் பகர்பூர் நகரத்திலும் வேறு சில இடங்களிலும் வன்முறை வெடித்தது. சாலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடிகள், இரும்பு கம்பிகளுடன் ஊர்வலமாக வந்தனர். காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மருத்துவமனைக்குத்
தீவைப்பு
ஊர்வலமாக வந்தவர்கள் வாகன விற்பனை கடை, மற்றும் மருத்துவமனைக்கு தீ வைத்தனர். காவல்துறை அனுமதி இன்றி ஊர்வலம் இஸ்லாமி யர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றது. இஸ்லாமி யர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு முன்பு ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆபாசமான பாடல்களை ஒலிக்க விட்டும், மோசமான வார்த்தைகளைக் கூறியதோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் வாகனங்களைச் சேதப்படுத்தினர். காவல்துறையினரின் முன்பாகவே இந்த வன்முறைகள் நிகழ்ந்தன.