லக்னோ. அக்.8- மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மடாதிபதியான யதி நரசிங்கானந்த் மகராஜ் என்பவர் அண்மையில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது அந்த மதத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மடாதிபதிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள தஸ்னா தேவி கோவில் முன்பு கடந்த 4.10.2024 அன்றிரவு 100-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காசியாபாத்தை சேர்ந்த பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், தஸ்னா தேவி கோவில் முன்பு போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் மீது கற்களை வீசி தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது நாடகம். உண்மையில் காவல்துறையினர் 10-20 பேரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும். ஒரு இரவில் 10-20 பேர் இப்படி கொல்லப்பட்டால் யாரும் இதுபோன்று போராட்டம் நடத்த நினைக்க மாட்டார்கள்” என கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.