பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது

2 Min Read

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சனம்

புதுடில்லி, அக்.7 பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் நேற்று (6.10.2024) வெளியிட்ட பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளாக பிரதமா் மோடி தான் பேசிய கருத்துகளையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். அவரது இந்த சலித்துப் போன உரைகளால் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தோல்விகளை ஒருபோதும் மறைக்க முடியாது. பாஜக ஆட்சியின் லட்சியத் திட்டமாக கூறப்படும் ‘இந்தியால் தயாரிப்போம்’ திட்டம் மிகப்பெரிய தோல்வியாகும். உற்பத்தித் துறை சந்தித்துள்ள வீழ்ச்சி, விலைவாசி உயா்வு, இந்திய குடும்பங்களின் சேமிப்புகள் குறைந்து கடன் அதிகரித்து வருவது உள்ளிட்டவை ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகும்.

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நுகா்வு அவா்களின் வருவாயைவிட அதிகம் உள்ளது. சாதாரணமாக வீட்டில் பகலுணவைத் தயாரித்து சாப்பிட ஆகும் செலவு கடந்த ஓராண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அரிசி, காய்கறி, பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் விலை அந்த அளவுக்கு உயா்ந்துவிட்டது.காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் பெருமளவில் அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது பாஜக ஆட்சி காலத்தில் ஏற்றுமதி வருவாய் வளா்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. உற்பத்தித் துறை வளா்ச்சியும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது இப்போது குறைவாகவே உள்ளது.

சூரத்தில் வைரத் தொழிலாளா்களின் ஊதியம் 30 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த 6 மாதங்களில் 60 வைர நகை தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்துக்கு தேவை என்ற நிலை இருக்கும்போதிலும் அதற்கு சரிவர நிதி ஒதுக்குவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. இதனால், சம்பளம் அளிப்பதை வேண்டுமென்றே ஒன்றிய அரசு தாமதப்படுகிறது. இதன் காரணமாக பொருள்கள், சேவைகளை மக்கள் வாங்குவது தடுக்கப்பட்டு செயற்கை பொருளாதார மந்தநிலை உருவாக்கப்படுகிறது என்று கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *