திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (6.10.2024) இரங்கல் தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை வரும் நவம்பர் 26ஆம் தேதி ஈரோட்டில் நடத்துவது என்பது பொருத்தமானது; தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்பதற்காக மட்டுமல்ல; காங்கிரசில் இருந்தபோதே ‘குடிஅரசு’ இதழை அதே ஈரோட்டில்தான் (2.5.1925) தொடங்கினார் என்பது பொன்மலர் மணம் வீசியதற்கு ஒப்பாகும்.
இந்திய வரைபடத்தில் ஈரோடு என்ற ஊர் இடம் பெற்றிருப்பதை உலகுக்குத் தெரிவித்தவர் தந்தை பெரியார்.
அவர் பெயரில் முன்னொட்டில் இடம் பெற்றுள்ள ‘ஈ’ என்ற எழுத்து ஈரோட்டைக் குறிப்பிடுவதாகும்.
அந்த வகையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் நடத்துவது சாலப் பொருத்தம்தானே!
அந்த ஈரோட்டில் தான் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மாநாட்டில் வாலிபர் மாநாடு, சங்கீத மாநாடு, மாதர் மாநாடுகளும் இணைக்கப்பட்டன.
வணங்குவோருக்கும் வணங்கப்படுவதற்கும் மத்தியில் தரகரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது சுயமரியாதைக்கு விரோதம் என்ற அரிய தீர்மானம் – இதுபற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் கலியாணம் செய்து கொள்வதாயிருந்தால், நம் நாட்டிலுள்ள கலியாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் அசாதாரணமானதே!
இந்த ஈரோட்டில் தான், தான் வகித்து வந்த 29 பதவிகளையும் ஒரு கால் கடுதாசியில் ராஜினாமா செய்து தூக்கி எறிந்து காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்டார் தந்தை பெரியார் என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
அதுவும் நவம்பர் 26ஆம் தேதி – ஈரோட்டில் சுயமரி யாதை இயக்க மாநாடு நடைபெறுவதில் முக்கியமானதோர் வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.
ஈரோட்டில் 10.5.1930 அன்று நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டின் முதல் தீர்மானம் என்ன கூறுகிறது?
‘வருணாச்சிரமக் கொள்கையும், ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூல காரணமென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு ஏற்படுமென்னும் கொள்கையை வெளியிடும் வேதப் புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது’
இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் என்பது – ஜாதி ஒழிப்பே!
வேத, புராணங்கள் மட்டுமல்ல; இந்திய அரசமைப்புச் சட்டம் 25, 26 ஆவது பிரிவுகளும் 13,19,368, 37(1) ஆகிய பிரிவுகளும் ஜாதியைக் கெட்டியாகப் பாதுகாக்கின்ற காரணத்தால் (ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருந்தால், அது உண்மையான சுதந்திர நாடாக இருக்க முடியுமா என்பதுதான் தந்தை பெரியாரின் கேள்வி) அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை 1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அறிவித்தார்.
அந்தப் போராட்டத் தேதி நவம்பர் 26 ஆகும். ஏன் அந்தத் தேதியைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்தார்? அந்த நவம்பர் 26 (ஆண்டு 1949) அன்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெற்று ஏற்றுக் கொள்ளப் பட்ட நாள்.
தந்தை பெரியார் எதைச் செய்தாலும், தீர்மானித்தாலும் அதில் ஓர் ஆழமான அர்த்தம் இருக்கும்.
ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் முழு ஒப்புதல் பெற்ற நாளான நவம்பர் 26அய்த் தேர்ந்தெடுத்து, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தும் போராட்டத்தைத் தேர்வு செய்து, நடத்தியும் காட்டினார்.
சட்டத்தைக் கொளுத்தினால் மூன்று ஆண்டு தண்டனை என்று அவசர அவசரமாக சென்னை மாநில சட்டமன்றத்தில் சட்டம் செய்ததைச் சற்றும் பொருட் படுத்தாமல், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திராவிடர் கழகக் கருஞ்சட்டைகள் குடும்பம் குடும்பமாக அந்தப் போராட்டத்தில் குதித்தனர். பலர் சிறையிலும் செத்து மடிந்தனர் – இத்தகைய தியாகத்தை மய்யப் புள்ளியாகக் கொண்டு நடத்தப்பட்ட போராட்டம் உலக வரலாற்றில் யாரும் படித்தறியாத ஒன்று.
அந்த ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளாக நவம்பர் 26ஆம் தேதியைத் தேர்வு செய்த, தந்தை பெரியார் பிறந்த – ‘குடிஅரசு’ இதழ் பிறந்த ஈரோட்டிலே சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நடத்துவது என்று திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒரு முக்கியமான கால கட்டத்தில் ஈரோட்டில், சுயமரி யாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
இது ஒரு கட்சி மாநாடு என்பதல்ல – மனித சமத்துவத் தையும் சகோதரத்துவத்தையும் நேசிக்கும் எல்லோரும் இரு கை நீட்டி வரவேற்க வேண்டிய மனித உரிமை மாநாடு.
ஜாதி ஆதிக்கம் கொண்டு திமிறி நிற்கும் கோயில் கருவறைக்குள் முற்றிலும் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போரட்டத்தின் நோக்கம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றாலும், மயிலை கபாலீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதார் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.
69 விழுக்காடு ஒதுக்கீடு அடிப்படையில் அர்ச்சகர்களின் நியமனம் நடைபெற்றாக வேண்டும்.
இது முழுமை பெற்றால் ஜாதி நச்சுப் பல்லின் வேர்கள் அழித்து ஒழிக்கப்படும் நிலையும் சிந்தனையும் மக்கள் மத்தியிலே உறுதியாக ஏழும்.
சமூகநீதி, சமத்துவ நீதி, சமதர்ம நீதி, பாலியல் நீதி நோக்கி ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற அனைத்து முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் இன்று தொட்டே தொடங்குவோம்!
சமத்துவ விரும்பிகள் சமதர்மக் கோட்பாட்டினர், முற்போக்கு சிந்தனையாளர், பெண்ணியவாதிகள் ஆளுக்கொரு கை கொடுக்க முன் வாருங்கள்.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும், இந்திய அரசின் கண்களிலேயே ஒரு மிரட்சி ஏற்படும்.
சுதந்திர இந்தியாவாம் அதில் ஜாதி இருக்குமாம் – அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம் – உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! ஈரோடு வழிகாட்டட்டும் – வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவோம்!