மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, அக். 6- கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
‘இந்த மனுவில் நியாயமான காரணங்கள் குறிப்பிடவில்லை’ எனக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான 8 நீதிபதிகள் அடங்கிய அமா்வு நிராகரித்தது. கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிலையில் அதன் நகல் 4.10.2024 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த உத்தரவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், அபய் எஸ்.ஓகா, ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சா்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கையொப்பமிட்டனா்.
ஆனால் நீதிபதி பி.வி.நாகரத்னா இந்த மனு விசாரணைக்கு உகந்தது என மாறுபட்ட உத்தரவை பிறப்பித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பினார். முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமா்வு கடந்த ஜூலை மாதம் விசாரணை மேற்கொண்டது.
அப்போது கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என 8 நீதிபதிகளும், அதிகாரம் இல்லை என நீதிபதி பி.வி நாகரத்னாவும் இரு மாறுபட்ட தீா்ப்பை கடந்த ஜூலை 25-ஆம் தேதி வழங்கினா்.
அப்போது, அமா்வின் 200 பக்க பெரும்பான்மை தீா்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வாசித்தார். ‘உரிமத் தொகை (ராயல்டி) என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால், குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான தொகையாகும்.
அதை வரி விதிப்பாக கருத முடியாது. உரிமத் தொகை மற்றும் வாடகையை வரியாகக் கருத முடியாது. அந்த வகையில், ‘உரிமத் தொகையும் வரிதான்’ என்று 1989-ஆம் ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பில் குறிப்பிட்டது தவறானது.
அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் 49, 50-ஆவது பிரிவுகளின் கீழ் நிலம் மற்றும் கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் 54-ஆவது பிரிவின்படி, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை.
மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது வரி விதிப்பதிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் (எம்எம்டிஆா்ஏ) 1957, மாநிலங்களை கட்டுப்படுத்தாது. எனவே சுரங்கங்கள், கனிமங்கள் மற்றும் கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு’ என குறிப்பிட்டார்.