மனித வளத்தை பாதுகாக்க தேவை – மதுவிலக்கு! மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரை

viduthalai
2 Min Read

உளுந்தூர்பேட்டை, அக். 3- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று (2.10.2024) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம்:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-இல் கூறியுள்ளவாறு, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரை யறுக்கவும், சட்டமியற்ற வேண்டும். மதுவிலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிடவேண்டும்.
மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணை யம் அமைத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடை களை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும். மனித வளத்தை பாது காக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழ் நாடு அரசு முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப் படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மய்யங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் சற்றேறக்குறைய 30 ஆயிரம் பணி யாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கும், மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பவேண்டும்.
மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பரப்புரை மேற் கொள்ள வேண்டும். மதுவிலக்கு போராளி சசிபெருமாள் பிறந்த நாளின்போது டாஸ்மாக் கடை களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.
இந்தத் தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து நிறைவேற்றும் என முழக்கமிட்டனர்.

உளுந்தூர்பேட்டையில் திரண்ட மகளிர்: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை ஒட்டி, உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் உள்ள மாநாட்டுத் திடலில் 75,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு மகளிர் அமர்ந்திருந்தனர். மாநாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டது.
அப்போது மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பெண்கள் ஆட்டம், பாட்டம் என ஆர்ப்பரித்தனர். இதனை மேடையில் இருந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தார் அக் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *