சென்னை, செப். 28- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அணைகளில் உள்ள நீர் இருப்பைப் பொருத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம், 50 சதவீத மின்னுற்பத்தி இலக்கை அடைந்துவிட்டோம். தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.
குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடுஆகிய 4 முக்கிய மின்னுற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதில் இருந்து நாள்தோறும் 7 மில்லியன் யூனிட் முதல் 10 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு போதுமான அளவுக்கு உள்ளது. விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையும் அதிக அளவு பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், இலக்கையும் தாண்டி நீர் மின்னுற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.