மரபு மருத்துவர்களும், மருத்துவ அறிவியலும்! -டாக்டர் சட்வா

viduthalai
5 Min Read

மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் என்ற ஒன்று வரலாற்றில் தேவைப்பட்டே இருக்காது.

என்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன் – அவரின் நான்கு வயது குழந்தைக்குக் காய்ச்சல். குழந்தை சுருண்டு படுத்துக் கிடந்தது. பார்க்கவே சற்று பலகீனமாக இருந்தது. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு, இரண்டு நாட்களாகக் காய்ச்சல் என்றார். மருந்து ஏதும் கொடுத்தீர்களா? என்று கேட்டேன். அவர் இல்லை நாங்கள் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக் கொள்வதில்லை. உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் என்றும், காய்ச்சல் உடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கை முயற்சி என்றும் கூறினார்.

அவரின் பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், பரிதாபமாகவும் இருந்தது. காய்ச்சல் என்பது உடலின் நீர்ச்சத்தை ஆவியாக்கக் கூடியது. சில மணி நேர காய்ச்சல் உடலின் நீர்ச்சத்தில் கணிசமான அளவை வீணாக்கிவிட வல்லது. குழந்தை தொடர்ந்து காய்ச்சலினால் நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு கிடந்தது (Dehydration).

மரபு மருத்துவர்கள் என்ற பெயரில் உலாவும் போக்கற்ற சிலர் இவ்வகை கருத்துகளைப் பரப்பிவிடுகின்றனர். பரப்பிவிடும் அவர்கள் பாதிப்பு என்று ஒன்று வரும்போது அதற்குப் பொறுப்பு ஏற்கப் போவதில்லை. அதனைத் தீர்க்கவும் போவதில்லை.

மேற்கண்ட உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளுமா? என்ற கருத்தில் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டு ஆராய வேண்டி உள்ளது.

1. மனித உடல் எல்லையற்ற நோய் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டதா?

2. நோய் வருவது உடலைப் பாதுகாக்கும் முயற்சியா?

3. இயற்கை என்பது மனிதனுக்கு சாதகமானதா?

மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் என்ற ஒன்று வரலாற்றில் தேவைபட்டே இருக்காது. இவர்கள் புகழும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவையும்கூட தேவைப்பட்டே இருக்காது. உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் இல்லாததால்தான் மருத்துவ முறைகளே தோன்றியது.

அதே போல உடலுக்குள் எல்லா வகை சக்திகளும் இருக்கின்றது என்பது ஒருவகையில் ஒரு ஆன்மீகம் சார்ந்த கற்பனைக் கருத்து ஆகும். அதே போல மனிதன் என்பவன் உயர்வான ஒரு பிறப்பு என்பது போன்ற ஒரு கருத்தும் அதில் உள்ளது. ஆனால், உண்மையில் பிரபஞ்சத்தில் சூரியன் என்ற மிகச் சிறிய நட்சத்திரத்தின் குடும்பத்தை சார்ந்த பூமி எனும் கோள் ஒன்றில் வசிக்கும் புறக்கணிக்கத்தக்க உயிரிகள்தான் மனிதர்கள். பிரபஞ்சத்தின் அளவு மற்றும் ஆற்றலுடன் ஒப்பிடும் போது மனிதன் ஒரு கருத்தே இல்லை.

உயிரிகள் தோற்றம் என்பது ஒரு விபத்தாக இங்கே நடந்தது ஆகும். அதன் பிறகு லட்சக்கணக்கான உயிரிகள் பரிணாமத்தில் தோன்றின. அந்த லட்சக்கணக்கான உயிரினங்களில் கணிசமான அளவு உயிரினங்கள் பிழைக்க முடியாமல் அழிந்துபோய்விட்டன (Extinct).

தொடர்ந்து பிழைத்து இருக்கும் உயிரிகளில் மனிதனும் ஒருவன். மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேட்டை யாடுதலில் கிடைத்த இறைச்சி மூலம் மிக அதிக புரதம், கொழுப்பு. விட்டமின் B3 மற்றும் B12 ஆகியவை மனித மூளை செழிப்புற்று வளர உதவியது. அதைத் தொடர்ந்து மனித இனம் வளர்ச்சியுற்ற மூளையைப் பயன்படுத்தி தனது பகுத்தறியும் திறனால் உயிர் பிழைத்து வருகின்றது.

இவ்வாறான மனிதர்களின் உயிர் பிழைத்தல் நிரந்தரமானது என்று சொல்ல இயலாது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மருத்துவத்தின் வரலாறு (The Cambridge Illustrated History of Medicine) எனும் நூலில் ஒரு ஆர்வமூட்டக்கூடிய கருது கோள் குறிப் பிடப்பட்டுள்ளது. அது ‘கிருமிகள் தாங்கள் வாழ்வதற்காக தான் மனிதர் களையே விட்டுவைத்துள்ளன’ என்பதாகும்.

பரிணாம வளர்ச்சியில் பாக்டீரியா, வைரஸ் முதலிய கிருமிகள் மிகவும் மோசமான தீவிரத்தன்மையுடன் (virulent) இருந்துள்ளன. அந்தக் கிருமிகள் உடலுக்குள் வந்துவிட்டால் ஓரிரு மணி நேரங்களில் மரணம் எனும் சூழல் அக்காலத்தில் இருந்துள்ளது. ஆனால், இவ்வாறு மிகவும் தீவிரத் தன்மையுடன் இருப்பது கிருமிகளுக்கே பாதிப்பாக முடிந்தது.

ஏனெனில் கிருமி தங்கியுள்ள (Host) மனிதன் உடனடியாக இறந்து விட்டால் அவைகளுக்குப் பிழைக்க இடமில்லாமல் மனிதனோடு சேர்ந்து இறக்க வேண்டியதாகிவிடும். ஆகவே, பரிணாம வளர்ச்சியில் கிருமிகள் காலப்போக்கில் சற்று தீவிரம் குறைந்தவைகளாகத் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொண்டன. அல்லது தீவிரத்தன்மை குறைந்த கிருமிகள் மட்டுமே தப்பிப் பிழைத்தன என்றும் கூறலாம்.
இருப்பினும் தடுப்பூசிகள் கண்டறியப்படும்வரை பிளேக், அம்மை போன்ற கொடிய கிருமிகள் மனிதனுக்குச் சவாலாக இருந்தது என்பதை நாம் விரிவாக முன்னரே அறிந்தோம்.

ஆக, இவ்வாறு மனித இனம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்வதே தன்னுடைய பகுத்தறிவின் மூலம் விளைந்த விஞ்ஞான அறிவினால் தான். இங்கே உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்ற பேச்சுக்கு இடமேதுமில்லை. தானாக சரியாகி போகக்கூடிய சில நோய்கள் (self limiting) உள்ளன என்பதும் உண்மைதான்.

ஆனால், ஒரு மனிதனுக்கு வந்துள்ள நோய் தானாக சரியாகக் கூடிய வியாதியா? அல்லது உரிய சிகிச்சை தேவைப்படுகின்ற ஒன்றா? என்பதை முடிவு செய்யவே ஒரு மருத்துவ அறிவியல் தேவைப்படுகிறது.

அடுத்ததாக நோய் வருவது மனிதனின் உடலின் கழிவை நீக்கும் முயற்சி என்று மரபு மருத்துவர்கள் பலர் கூறிவருகின்றர். இது நகைச்சுவையானதாகும். எடுத்துக்காட்டாக சிறுநீரகம் என்பதை கொள்வோம். அது ஒரு கழிவு வெளியேற்றும் உறுப்பு ஆகும்.
ஒருவருக்கு சிறுநீரகம் செயல்படவில்லை,நோய் வந்து விட்டது என்று கருதுவோம். இப்போது மரபு மருத்துவர்கள் இந்த சூழலை எப்படிச் சொல்வார்கள்? இந்த சிறுநீரக நோய் கழிவை வெளியேற்ற வந்துள்ளது என்று சொல்வார்களா?

கழிவு ஒழுங்காக வெளியேறாமல்தானே நோயே வந்துள்ளது? ஆகையால் நோய் என்பது உடலின் கழிவை வெளியேற்றும் ஒரு உன்னத முயற்சி என்ற இந்தக் கருத்து முற்றிலும் தர்க்க விரோதமானதாகும்.

ஒருவருக்கு உடலில் ஒரு இடத்தில் கம்பி கிழித்து, காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். காயம் உள்ள இடத்தில் வலி ஏற்படும். வலி எதனால் ஏற்படுகிறது எனில் அது உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் முயற்சியில் ஏற்படும் ஒன்று அல்ல. மாறாக வலி உங்களை மருத்துவமனைக்குப் போக அழைக்கிறது.

காயத்தைத் தையல் போட்டு மருந்து இடப் பணிக்கின்றது. இதுவே வலியின் பணி ஆகும். மாறாக வலி என்பது உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் முயற்சி என்று சொல்ல இயலாது. அதே போலவே காய்ச்சலும் ஆகும். காய்ச்சல் உடலுக்குள் ஏதோ ஒரு கிருமி புகுந்துள்ளதை அறிவிக்கின்றது. அதனைப் பார்த்து நாம் சரிசெய்துகொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்.

அதே போல, இயற்கை என்பது மனிதனுக்கு சாதகமாகவே எப்போதும் இருக்கும் என்று மக்கள் பலர் நம்புகின்றனர். இது எந்த வகையிலும் உண்மையல்ல. இயற்கை அதன் போக்கில் உள்ளது. பிழைத்துக்கொள்ள வேண்டியது மனிதனே.மனித இனம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் இயற்கைக்கு எந்தக் கவலையும் இல்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *