கவிஞர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் இன்று (25.9.1899)
10,000 பகுத்தறிவுப் பாடல்கள் எழுதிய
அவருக்கு ஆசிரியர் நேரிலேயே சென்று பாராட்டினார்
மறக்கமுடியாத மறுக்க முடியாத பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவு கவிராயர், சீர் திருத்தக் கவிஞர், ‘தமிழக பாவலர்’ என்ற சிறப்புகளைப் பெற்ற உடுமலை நாராயண கவியின் பிறந்த நாள்
1899 ஆம் ஆண்டில் செப்டம்பர் 25ஆம் தேதி (அப்போதைய ஒன்றிணைந்த கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.
சிறுவயதில் பெற்றோரை இழந்ததால் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்லவேண்டியதால் நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டார். கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். உடுமலை சரபமுத்து சாமி கவிராயரிடம் மாணவராக அறிமுகமாகி நாடகத்தில் நடித்தும் எழுதி பாடி அதன் நுட்பங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் முத்துச்சாமி அவர்களின் பரிந்துரையால் தவத்திரு சங்கரதாஸ் சாமியிடம் நாடகக் கலையை கற்றுத் தேர்ந்தார் . பாரதியாரின் நட்பைத் தொடர்ந்து பாமர மக்களின் விழிப்புணர்வை தூண்டும் வகையில் பாடல்களை இயற்றத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதி வந்த நாராணயணகவி பின்னாள்களில் விடுதலைப் போராட்ட நாட்களில் தேசிய உணர்வை தட்டி எழுப்பும் வகையில் பாடல்களை இயற்றத் தொடங்கினார். பின் இயக்குநர் ஏ.நாராயணன் மூலம் திரைத்துறையில் பாடல்கள் எழுத ஆரம்பித்தார். சந்திரமோகனா என்ற படத்தில் முதல் பாடலை எழுதி திரையுலகில் நுழைந்து, நகைச்சுவை நடிகர்
என்.எஸ்.கிருஷ்ணனின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார். கலைவாணரின் தொடர்பால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், போன்ற திராவிட இயக்க தலைவர்களின் நட்பைப் பெற்றார்.
இதையடுத்து வேலைக்காரி, பராசக்தி, நல்லதம்பி, ரத்தக்கண்ணீர் போன்ற ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதினார். தன் பாடல்கள் மூலம் சமூகத்தில் புரையோடி இருந்த மூடப்பழக்கவழக்கங்களைக் களையெடுக்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வந்தார். நாராயண கவி அந்த நாட்களில் சுமார் 10,000 பாடல்களை எழுதினார்.
இதில் கா…கா…கா… (பராசக்தி), அந்தக்காலம் (நல்லதம்பி, 1949, பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்), நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக் கணும் விவசாயி, 1967, 1954ஆம் ஆண்டில் “இரத்தக் கண்ணீர்” படத்தில் இவர் எழுதிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?” ஒன்னுலயி ருந்து இருபது (முதல்தேதி, 1955, இசை: ஜி. ராமநாதன், பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)
1956ஆம் ஆண்டு வெளியான “மதுரை வீரன்” படத்தில் உழைப் பவர்களுக்கெனப் பாடிய “சும்மா இருந்தா’’ போன்ற பாடல்கள் உடுமலை நாராயண கவியின் பகுத்தறிவு கலந்த பாடல்களுக்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டுகளாகும். தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ என்னும் பட்டம் தந்து சிறப்பித்தது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் ஒன்றை அமைத்துள்ளது . இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நாராயணகவியை – அவருடைய முதுமையில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உடுமலைக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.