புதுடில்லி, செப்.22- ஏஅய் தொழில்நுட்ப வசதிகளுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகிப்பதாக தலைமை நீதிபதி பெருமிதத்துடன் கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதன்முதலாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் சுமார் 37 ஆயிரம் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தற்போது பிற மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழில் மொழிப் பெயர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஹிந்தி, அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி உள்ளிட்ட 22 மொழிகள் அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற விசாரணையின் போது ‘மின்னணு உச்ச நீதிமன்ற அறிக்கை’ (இ-எஸ்சிஆர்) மூலம் பெறப்படும் தீர்ப்புகளின் மேற்கோள்களை வழக்குரைஞர்கள் வழங்க வேண்டும். அவை வழக்குரைஞர்களின் வாதங் களுக்கு ஆதரவாக இருக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்ப உதவியுடன் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப் படுகின்றன. இ-எஸ்சிஆர் எனப்படும் உச்ச நீதி மன்றத்தின் டிஜிட்டல் பதிப்பு மக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும், நீதித்துறையில் பணியாற்று பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
கருநாடகத்திலும்
மாநில மொழி உரிமைக்குரல்!
பெங்களூர், செப்.22- பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து என்பது யாருக்குமே புரியாத வகையில்தான் இருக்கும். அதுவும் ஆங்கிலத்தில் இருப்பதால் பலருக்கும் சுத்தமாகப் புரியாது. இந்நிலையில், கன்னட மொழியைப் பாதுகாக்கும் வகையில் கருநாடகத்தில் உள்ள மருத்துவர்கள் பலரும் நோயாளிகளுக்கு கன்னட மொழியில் மருந்துச் சீட்டுகளை எழுதத் தொடங்கியுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கருநாடகத்தில் கன்னட மொழியைப் பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே வணிக வளாகங்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றில் கன்னட மொழியில் பெயர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இந்நிலையில், கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் கன்னட மொழியைப் போற்றவும், பெருமைப்படுத்தவும், கிராம மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் மருந்துச் சீட்டுகளில் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த நடைமுறையைக் கொண்டு வர உத்தரவிட வேண்டும். மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கருநாடகத்தில் உள்ள மருத்துவர்கள் பலர் கன்னடத்தில் மருந்துச் சீட்டுகளை எழுதத் தொடங்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் இந்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.
மூடநம்பிக்கையின் கேவலம் – ஆபாசம்!
கடன் தொல்லை தீரும் என்று கூறி இளம் பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்திய கணவர்
கோழிக்கோடு, செப்.22- கேரள மாநிலம் கோழிக் கோடு மாவட்டம் தாம் ரைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷெமீர்(வயது 38). இவர் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு சமீபத்தில் வியாபாரத்தில் நிகழ்வு ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது.
அதோடு கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷெமீர் மன உளைச்சல் அடைந்தார். இதுதொடர்பாக அவர் தனது நண்பரான அடி வாரம் பகுதியை சேர்ந்த பிரகாசன் என்பவரை அணுகி ஆலோ சனை கேட்டார்.
அதற்கு அவர் குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை தீர்வதற்கு பரிகாரமாக ஷெமீரின் மனைவியை நிர் வாணமாக அமர வைத்து பூஜை செய்ய வேண்டும். அவரது மனைவியை பிடித்த பேயை விரட்ட வேண்டும் என கூறி உள்ளார். இதை நம்பிய ஷெமீர் தனது மனைவியிடம் நிர்வாண பூஜைக்கு இணங்குமாறு கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. மேலும் மனைவியை பூஜைக்கு வர சம்மதிக்குமாறு வற்புறுத்தி அடித்து, உதைத்தார். இதில் அந்த பெண் காயமடைந்தார்.
இதுகுறித்து அவர் காவல் துறையில் ஷெமீர், பிரகாசன் ஆகிய 2 பேர் மீதும் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் நிர்வாண பூஜையில் கலந்துகொள்ளுமாறு மனைவியை கட்டாயப்படுத்தி ஷெமீர் தாக்கியதும், அதற்கு பிரகாசன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷெமீர், பிரகாசன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.