மலேசியா, செப். 21- மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 146- ஆவது பிறந்தநாளோடு; சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, கழக மதியுரைஞர் ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு. முத்தையா அவர்களின் தலை மையில், மலரும் 22.9.2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 3.00 மணிக்கு, கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன், தான்சிறி, டத்தோ, கே.ஆர். சோமா அரங் கில் நடைபெற உள்ளது.
இவ்விழாவை, உரிமை இயக்கத்தின் இடைக்காலத் தலைமை உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுவார்.
கழகத்தின் துணைப்பொதுச் செயலாளரும் பெரியார் கொள்கையாளருமான தமிழ் இனியன் கமலா தேவி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
உரைப்பொழிவு 1: ‘பெண்களின் உயர்வு; என்ற தலைப்பில் கழக மகளிர் அணி பொறுப்பாளர் சு. இனியாள் அவர்களும், உரைப்பொழிவு 2: ‘இனம், மொழி மீட்பு’ என்ற தலைப்பில் இளைஞர் அணித் தலைவர் த.நெ. நெடுச்சுடர் அவர்களும், உரைப்பொழிவு 3: ‘மூட நம்பிக்கை’ ‘ஜாதி ஒழிப்பு’ என்ற தலைப்பில், மலேசிய கெடா மாநிலத் தலைவர் தோழர், யாழன் அவர்களும், உரைப்பொழிவு 4: ‘சுயமரியாதை இயக்கப் பெண்ணியம்’ என்ற தலைப்பில் கழக மகளிர் அணித் தலைவர், பஞ். தமிழ்த்தென்றல் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.
‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளுக்கேற்ப வரலாறு காணாத சமுதாய சீர்திருத்த மருத்துவர் தந்தை பெரியார் அவர்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நமது சமுதாயத்தின் அவல நிலைகளைக் கண்டு பிடித்து, அதன் மூலகாரணங்களை ஆய்ந்து ‘பேதங்களற்ற சமத்துவ சமுதாயம்’ அமைத்திட பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண் கல்வி, பொருளாதாரத்தில் சிக்கனம், மூடநம்பிக்கை ஒழிப்பு, எழுத்துச் சீர்திருத்தம் என பயனுள்ள பல சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு விழா எடுப்பதில் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் பெருமைக்கொள்கிறது.
கழகத் தலைவர் நாக.பஞ்சு அவர் களின் வரவேற்புரையோடு தொடங்கும் இவ்விழாவில், மாணவர்களின் கவிதைப் படைப்புகளும் இடம்பெறும். எனவே, விழாவிற்கு பெரியாரின் கொள்கைப் பற்றாளர்களும் பொதுமக்களும் கழகத் தோழமை இயக்கங்களும் இதனையும் அழைப்பாக ஏற்று விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென கழகப் பொதுச் செயலாளர் அன்பரசன் சண்முகம் அனைவரையும் அழைக்கின்றார்.