அய்யா பிறந்தார்! – பெரியார்
அய்யா பிறந்தார்!! – எங்கும்
அறிவொளி படர்ந்ததம்மா!
மெய்யை உரைத்தார்! – அவர்
மெய்யால் உழைத்தார்!! – இந்த
மேதினி மலர்ந்ததம்மா!!
இல்லை மதமே! -அது
தொல்லை தருமே! – உன்
வெள்ளை மனமே! – அதில்
வீழக் கெடுமே!! (இல்லை)
சாதி உணர்வே! – அது
சாய்க்கும் குணமே! – கல்வி
ஓதி உணர்ந்தால் – நன்மை
ஓங்கி வருமே! நன்மை
ஓங்கி வருமே!!
என்றே மொழிந்தார்! – அதில்
நின்றே நடந்தார்! – வெற்றி
கண்டு மகிழ்ந்தார்! – நம்
கண்ணில் நிறைந்தார்!!
கடவுள் படைப்போ? – நாம்
கடைகீழ் பிறப்போ? – அந்த
மடமை உடைப்போம் -எங்கும்
மனிதம் வளர்ப்போம்!(கடவுள்)
என்ன சதியோ? – மனு
சொன்ன விதியோ? – அது
இன்னுந் தடையோ? – பெரியார்
ஒன்றே விடையோ? – பெரியார்
ஒன்றே விடையோ?
ஞானம் விதைத்தார்! – அதில்
மானம் விளைத்தார்!! – நெஞ்சின்
ஊனம் களைத்தார்!! – நம்மின்
ஈனம் வெளுத்தார்!
பொன்னின் நிறந்தான் – கருத்து
பொழியும் மழைதான் – பெரியார்
இன்னல் துடைத்தே – தரும்
இன்பம் மலைத்தேன்!
இன்பம்….. மலைத்தேன்!!
எண்ணம் சிறக்கும்! வாழ்வில்
ஏற்றம் பிறக்கும் – பெரியார்
மண்ணில் பிறக்கும் மங்கை
மாண்பு சிறக்கும்!
மாண்பு…. சிறக்கும்!
நாளை தொழுமே! உலகம்
நாளுந் தொழுமே!! – பெரியார்
ஆளும் உலகில் – பொதுமை
நீளும் நிதமே!!
– பாவலர் சுப முருகானந்தம்
மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு