பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியார் வாழ்கவே!

2 Min Read

மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு
என பகுத்தறிவுப்பாடம்
நடத்திய ஆசானே…
தன்மானத்தை விட இனமானம்
பெரிதென்று எடுத்தியம்பிய
எங்கள் பகுத்தறிவுப் பகலவனே!

பெண்ணைப் போகப்பொருளாய்
பார்த்தவர்கள் மத்தியிலே…
பெண்ணுக்கும் ஆணைப்போல்
அனைத்து உரிமைகளும்
உண்டென்று
ஆணித்தரமாய் பேசி
ஆண்டாண்டு காலமாய்
அடிமைகளாக இருந்த பெண்களின்
அடிமைச்சங்கிலியை
உடைத்தெறிந்த
பெண்ணுரிமைப் பாதுகாவலரே!

பெண் கல்வியின் முக்கியத்தை
பெரும்பாலும் பேசியதோடு
மட்டுமின்றி
போராட்டங்கள் பல நடத்தி…
பெண்கள் மட்டும் படிக்கின்ற
பல கல்வி நிறுவனங்களை
உருவாக்கி…
பெண்களுக்கு பல உரிமைகளை
பெற்றுத்தந்த
பெண்ணுரிமைப்போராளியே!

பெண் விடுதலைப்பற்றி
மற்றோரெல்லாம்
ஏட்டில் மட்டும் எழுதியபோது
நீ மட்டும் தான் எங்களுக்காக
ரோட்டில் நின்று போராடினாய்!

அடுப்பங்கரைகளில் பெண்கள்
அடிமையாகக் கிடந்தது போதும்…
அவர்கள் கைகளில் இருக்கும்
கரண்டியைப் பிடுங்கி விட்டு
புத்தகங்களைக் கொடுங்கள்…
அவர்கள் இந்த வீட்டை மட்டுமல்ல,
இந்த நாட்டையே
பல்கலைக்கழகமாக
மாற்றுவார்கள் என்று
சொன்னதோடு மட்டுமல்லாமல்
செயலாக்கிக் காட்டியவரே!

தலையெழுத்தேயென்று தன்
கையெழுத்துக்கூட போடத்
தெரியாமலிருந்த
பெண்களை இன்று
பச்சை நிற மையிலும்,
இளஞ்சிவப்பு நிற மையிலும்
கையெழுத்திட வைத்திட்ட
புரட்சி நாயகரே!
ஏட்டுக்கல்வி கற்கக்கூட
இயலாமல் இருந்த எங்களை
பட்டப்படிப்பு முதல்
ஆராய்ச்சிப் படிப்பு வரை படித்து
ஆண்களை விட
அதிக பட்டங்களைப்பெற்று
அனைத்திலும் நாங்கள்
முன்னனியில்
இருப்பதற்கு வித்திட்ட
எங்கள் வழி காட்டியே!

பெண்களும் ஆண்களைப்போல்
சுயமரியாதையோடு,
சுயசம்பாத்தியத்தில்
சுதந்திரமாய் வாழ்ந்திட வேண்டும்
என நீ பேராவல் கொண்டு
பெருமுழக்கம் செய்ததனால்
இன்று பெண்களெல்லாம்
தலைநிமிர்ந்து
தன்மானத்தோடு வாழுகின்றார்!

கல்வியறிவு இன்றி
சுயசிந்தனை இன்றி
கரடு முரடாய்க்கிடந்த தமிழ்
நிலத்தை (தமிழினத்தை)
பிரச்சாரம் என்ற
பகுத்தறிவு நீர்ப்பாய்ச்சி
பண்படுத்தி, திருத்தி, சீராக்கி
தன்மானம், சுயமரியாதை
விளைவித்த
பகுத்தறிவு விவசாயியே!

ஆரியத்தின் வேரறுக்க
வந்த திராவிடமே
ஆற்றல் மிகு
தமிழினத்தின் வழித்தடமே…
ஆண்டாண்டுக் காலமாய்
அடிமைப்பட்டுக்கிடந்த
தமிழினத்தை
தட்டியெழுப்பிய தலைவரே…
எங்கள் தந்தை பெரியாரே!

நீ வாழி…!!!
வாழ்க நின் புகழ்….!!!!

– வீ.கா.ரா.பெரியார் செல்வி
சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *