திருவள்ளூர் – கிருஷ்ணகிரியில் உற்பத்தி நிலைய விரிவாக்கம்

Viduthalai
3 Min Read

கேட்டர்பில்லர் நிறுவனத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலீடு ரூபாய் 500 கோடி

சென்னை, செப்.13 திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கத்துக்காக, அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தொழில் துறையை பொருத்தவரை, இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் தமிழ்நாடு கவனம் பெற்று வருகிறது. , முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டு இருப்பதே இதற்கு சான்று.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட மிக அதிக மாக இருப்பதும், தமிழ்நாடு திறன்மிக்க பணி யாளர்களை பெற்றுள்ளதும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு நோக்கி வர முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், அதிக முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கும் வகையில், உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்க ளையும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

சென்னை திரும்புகிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.9.2024) இரவு புறப்பட்டு, இன்று (13.9.2024) துபாய் வருகிறார். நாளை (14.9.2024) சென்னை திரும்பும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிரமாண்ட வரவேற்பளிக்க திமுகவினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய இலக்கை நிர்ணயித்துள்ள , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க, அரசுமுறை பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். இந்தபயணத்தின்போது, முதலமைச்சர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதியதொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சிகாகோவில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடந்த 11 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.500 கோடி முதலீட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது உள்ள இந்த நிறுவனத்தின் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவு படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர், உலக அளவில் கட்டுமானம், சுரங்க கருவிகள், ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், டீசல் – எலெக்ட்ரிக் இன்ஜின்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இது கட்டுமான தொழில், வளத்தொழில், எரிசக்தி – போக்கு வரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிக பிரிவுகளில் செயல்படுகிறது. டிராக்டர், ஹைட்ராலிக் அகழ்வு கருவி, பேக்ஹோ ஏற்றி, மோட்டார் கிரேடர், ஆஃப்-ஹைவே டிரக், வீல் லோடர், விவசாய டிராக்டர்கள் மற்றும் இன்ஜின்களுக்கான இயந்திரங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் இர்விங் நகரில் இதன் பன்னாட்டுத் தலைமை அலுவலகம் உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவர் கெர்க் எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறைசெயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *