‘‘எனக்கு சரிவர கிடைக்காத கல்வி மற்றவர் களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது பேராசை’’என்கிறார் சென்னையை சேர்ந்த சம்சுல் ஹூதா பானு. பெண் தொழில்முனைவோராக அசத்தி வரும் இவர் தனது ஓய்வு நேரங்களில் கல்வியின் அவசியம், கிராஃப்ட் தயாரிப்பு மற்றும் சுய தொழில் குறித்த விடயங்களை தன்னிடம் படிக்க வரும் பிள்ளைகளுக்கு இலவசமாக சொல்லித் தருகிறார்.
‘‘நான் மசாலாப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதற்காக உதவ வரும் பெண்களில் பலர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிக்கே அனுப்பி வருகிறார்கள். காரணம், அவர்களுக்கு வரும் வருமானமே அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் சரியாக இருக்கும். இதில் அந்தப் பசங்களுக்கு டியூஷன் வைக்க அவர்களிடம் போதிய வசதி இல்லை என்று சொல்வார்கள்.
மிகவும் வறுமையில் உள்ள சில பிள்ளைகளுக்கு நானே கல்விக் கட்டணமும் செலுத்தி அவர்களை பள்ளியில் படிக்க வைக்கிறேன். கல்வி ஒன்றுக்கு தான் நமது வாழ்வை மாற்றிப் போடும் சக்தி இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அந்தக் காரணம்தான் இந்தக் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கிறேன்’’ என்றவர், கலைத்துறை மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார்.
‘‘எனக்கு இந்த கிராஃப்ட் செய்வதில் இருபது ஆண்டு அனுபவங்கள் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனது தையல் ஆசிரியரை பார்த்து நிறைய கை வேலைகளை செய்து வந்தேன். கைவினைப் பொருட்கள், பானை மற்றும் கண்ணாடிகளில் பெயின்டிங் செய்வது குறித்து அறிந்து கொண்டேன். நான் மசாலா வேலையில் ஈடுபட்டு இருந்ததால், கைவினை வேலையினை தொழிலாக செய்யும் எண்ணம் இல்லை.
ஆனால், கற்றுக்கொண்ட இந்த கலை மறக்காமல் இருக்க அதனை பலருக்கும் கற்றுத்தர விரும்பினேன். ஆர்வமாக கேட்பவர்களுக்கு சொல்லித் தருகிறேன். இன்று சிலர் அந்த கை வேலைகளை திறம்பட கற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்து சம்பாதிக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பல குழந்தைகள் ஒயர்கூடைகளை பின்னி விற்பனை செய்து வருகிறார்கள். கல்வியோடு அனைவருமே ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதன் மூலம் அதில் வரும் வருமானத்தினால் அவர்களின் செலவினை சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார்.