பாராட்டுகிறோம்
இன்றைய அரசியல் கிளர்ச்சியானது “சுயராஜ்ஜியம் சம்பாதிக்க” என்று சொல்லிக்கொண்டு, வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவே பாடுபடுகின்றது என்பதை நாம் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.
வகுப்புவாரி பிரதிநிதத்துவ முறை வேண்டுமென்ப தற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது, அதி தீவிர காங்கிரஸ்வாதியாகவும், அதிதீவிர தேசியவாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும்.
அக்கட்சி கல்வியில், அறிவியல், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால் அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.
இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம்முயற்சியும் வெகு காலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப் பனர்களுக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேசத்துக்கும், விசமப் பிரச்சாரத்துக்கும் ஆளாக வேண்டி இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது, பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பிரிவினையையும் கட்சி பேதங்களையும் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.
எது எப்படி இருந்தபோதிலும், பல காரணங்களால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலை நிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது.
இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள் ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது.
பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருக்கின்றது. என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டதாய் விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியேயாகும்.
அந்த முறை இந்திய கவர்ன்மெண்டிலும், அய்.சி.எஸ். முதலிய பெரிய இந்திய உத்தியோகத்திலும் கையாளப் பட வேண்டும் என்கின்ற கிளர்ச்சியும், இப்பொழுது வலுவடைந்து அது அரசாங்கத்தாரால் கவனிக்கப்படப் போகின்றது என்கின்ற சேதியும் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும்.
ஆனால், நமது மாகாணத்துக்குள்ளாகவே இருந்து வரும் ஜுடிசியல் இலாகா அதாவது முனிசீப், ஜட்ஜ் முதலிய தேசிய உத்தியோகங்களில் இந்த முறையானது சரியாய்க் கவனிக்கப்படாமலும், நமது மாகாணத்தில் உள்ள ரயில்வே இலாகாக்களில் இதுவரை சிறிதும் கவனிக்கப்படாமலும் இருந்து வந்தது ஒரு பெருங் குறையாகவும், மிகுதியும் வருந்தத்தக்க விசயமாகவும் இருந்து வந்தது.
– குடிஅரசு, 23.6.1935 தலையங்கம்
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி