நெய்வேலி, ஆக.28- கடலூா் மாவட்டம், வாழப் பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: மணமேடு கிராமத்தைச் சோ்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோா் வாழப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பானை ஓடுகள் மற்றும் உறைகிணறுகள் சிதைந்து ஆங்காங்கே இருப்பதாகத் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அண்மையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், சுடுமண் பொம்மை, வட்டச் சில்லுகள், கெண்டி மூக்குகள், உடைந்த அகல் விளக்கு, ராஜராஜன் காலத்து செப்பு நாணயம், ஆங்கிலேயா் காலத்து செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன என்றாா்.
ஒன்றிய அரசு தூங்குகிறதா?
நாகப்பட்டினம் மீனவர்களை தாக்கி
ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை!
ராமேஸ்வரம். ஆக.28- கடலில் மீன் பிடிக்க சென்ற. நாகை மீனவர்களை கடற்கொள்ளையர் தாக்கி ரூ.5 லட்சம் பொருட்களை பறித்து சென்றனர்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை(55) தனது பைபர் படகில் மகன் மணிகண்டபிரபு (22), கங்காதரன்(38) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் (26.8.2024) இரவு 7 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர், பைபர் படகை சுற்றி வளைத்ததோடு பட்டாகத்தி, இரும்பு கம்பியால் 3 மீனவர்களை தாக்கி, இன்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை, அலைபேசிகள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். தாக்குதலில் மணிகண்டபிரபுவின் இடது பக்க தொடையில் காயம் ஏற்பட்டது. அவர் நேற்று (27.8.2024) காலை செருதூர் மீன்பிடி இறங்குதளம் வந்ததும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
பா.ஜ. ஆட்சியில் மீனவர்கள்
மீதான தாக்குதல் அதிகரிப்பு
அகில இந்திய மீனவர் காங்கிரசின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கை:
“முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும் மிக எளிதாக விடுவிக்கப்பட்டனர். பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கை கடற்படையின், தமிழ்நாடு மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. மீனவர்களை விட்டாலும், படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அரசு, மைனாரிட்டி அரசாக பலவீனமாக இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.
சுற்றுச்சூழல் குறித்த
விழிப்புணர்வு – மாரத்தான் போட்டி
சென்னை, ஆக. 28- சென்னையின் முன்னணி தன்னார்வ அமைப்பாகிய மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் அமைப்பு, தமது சேவையின் 350-ஆவது வாரத் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், அண்மையில், புழுதிவாக்கத்தில் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சியின் 14ஆவது மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன், இந்திய விளையாட்டு வீரர் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் குடும்பம், குடும்பமாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் அய்ந்து கிலோ மீட்டர் என மூன்று விதமாக மாரத்தான் ஓட்டங்கள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக – சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 8 மணி வரை, மரங்கள் நடும் பணியில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, வேளச்சேரி, சுண்ணாம்பு குளத்தூர் போன்ற சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அய்ந்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 7600-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றைப் பராமரித்து வருகிறது. மேலும், இரண்டு பெரிய நீர் நிலைகளை தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரி உள்ளது.