திருவனந்தபுரம், ஆக.25 கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர்.
கேரளாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும், பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்றுமுன்தினம் (23.8.2024) அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், வி.எம். சியாம்குமார் அடங்கிய அமர்வு கூறுகையில், “மனிதனின் அக்கறையின்மை மற்றும் பேராசைக்கு இயற்கையின் எதிர்வினைதான் வயநாடு நிலச்சரிவு. இயற்கை நீண்டகாலத்துக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை விடுத்தது. கேரள அரசு அதன் வளர்ச்சிக் கொள்கையை மறுபார்வை செய்ய வேண்டும். இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காட்டு உயிர் கானுயிர் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் தடுப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகளில் புதிய அணுகுமுறை தேவை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்க விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளது.
தேவகவுடா பேரன் பிரஜ்வல்ரேவண்ணாமீது குற்ற பத்திரிகை தாக்கல்
பெங்களூரு, ஆக.25 கருநாடக மேனாள் முதலமைச்சர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண் களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்சிப் பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர்.
அதன்பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்தனர். அவரது தந்தையும், மேனாள் அமைச்சருமான எச்.டி. ரேவண்ணா மீதும் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். ரேவண்ணா ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், பிரஜ்வல் இன்னும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 4 குற்றப்பத்திரிகைகளை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஒவ்வொரு குற்றப்பத்திரிகையும் சுமார் 1,500 முதல் 2,500 பக்கங்கள் வரை உள்ளன. அடுத்த சில நாள்களில் எஞ்சியுள்ள ஒரு வழக்கிலும் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.