சிறீநகர், ஆக. 23- காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சிறீநகரில் தேசிய மாநாடு கட்சித் தலைவர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை ராகுல் காந்தி சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி என 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்காக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சிபோன்ற உள்ளூர் கட்சிகளும் மிகவேகமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக கட்சியின் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் (21.8.2024) காஷ்மீர் சென்றனர். பின்னர் நேற்று (22.8.2024) அவர்கள் காஷ்மீரை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டணி பேச்சுவார்த்தை
நிர்வாகிகள் சந்திப்பை முடித்துக் கொண்டு ராகுல், கார்கே இருவரும் தேசிய மாநாடு கட்சித்தலைவர்களும், மேனாள் முதலமைச்சர்களுமான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை அவர்களது வீட்டில் சந்தித்தனர். முன்னதாக காஷ்மீர் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார்.
கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப்பின் ராகுல் காந்தியு டன் இணைந்து சிறீநகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘காஷ்மீர் தேர்தல் அறிவிப்புக்குப்பின் முதல் முறையாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து உள்ளூர் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதற்காக இங்கே வந்திருக்கிறோம். ராகுல் காந்தி தலைமையின்கீழ் காஷ்மீருக்கு மாநில தகுதி மீட்டெடுக்கும் முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். அதற்காக உழைப்பதாக உறுதியளிக்கிறோம்’ என தெரிவித்தார்.
பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ராகுல் காந்தி ஆர் வமாக இருப்பதாக கூறிய கார்கே, இந்தியா கூட்டணி மத்தியில் ஒரு சர்வாதிகாரியை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியது என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைத்திருந்த இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தேசிய மாநாடு கட்சியும் அங்கம் வகித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறுப்பின் சந்தையில் அன்புக்கடை
பின்னர் ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது:- காஷ்மீர் மக்களுடன் ஒரு மிக ஆழமான உறவு எனக்கு உள்ளது. இந்த மக்களுக்கு என்ன வழிகளில் எல்லாம் உதவ முடியுமோ, காங்கிரஸ் எப்போதும் அதை செய்யும். நீங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வன்முறையை அகற்ற விரும்புகிறோம். எனது இந்திய ஒற்றுமைப் பயணம் இங்கே நிறைவடைந்தது. மரியாதை மற்றும் சகோதரத்துவத்துடன் வெறுப்பின் சந்தையில் நாம் அன்பின் கடையைத் திறப்போம்.
மீண்டும் மாநில அந்தஸ்து
இந்தியாவில் யூனியன் பிரதே சங்கள்தான் மாநிலங்களாக மாறி யிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு இருக்கிறது. காஷ்மீருக்கு மாநில தகுதி மிக விரைவில் மீண்டும் பெற்றுத்தருவது காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் முன்னுரிமை ஆகும். இது சட்ட சபை தேர்தலுக்கு முன்னரே நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு முன்னோக்கிய நடவ டிக்கைதான். விரைவில் மாநில தகுதி மீட்டெடுக்கப்படும். அத்துடன் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.