இந்நாள் – அந்நாள்

Viduthalai
1 Min Read

கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877)
‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

கைவல்யம் (1877-1953) பகுத்தறிவு எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்தார். இந்துமதத்தில் நிலவும் மூட நம் பிக்கைகளையும் இந்துமதத் தொன்மக் கதைகளின் பொய் களையும் ஆராய்ந்து நூற்றுக்கணக் கில் கட்டுரைகளை எழுதினார்.
கைவல்யசாமி கேரளத்தில் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பொன்னுச்சாமி ஆகும். திருச்சிராப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கரூரில் மவுனசாமி மடத்தில் சேர்ந்து சமய இலக்கியங்களைக் கற்றார். “கைவல்ய நவநீதம்” என்னும் சைவ சமய நூலை நன்றாகக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். எனவே “கைவல்யசாமி” என்று மக்கள் இவரை அழைக்கலாயினர்.

கைவல்யசாமி 1903 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருச்செங்கோடு அருகில் இளம்பிள்ளை என்னும் ஓர் ஊரில் ஒரு நிலக்கிழார் இல்லத்தில் தந்தை பெரியாரும் கைவல்யசாமியும் அருகருகே அமர்ந்து விருந்து உண்டனர். அப்போது பெரியார் குடிநீர் தீர்ந்துவிட, குவளையில் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அங்கிருந்த உணவுப் பரிமாறிய பார்ப்பனர் அக்குவளையைக் கையிலெடுத்து குடிநீரை ஊற்றினார். அதைப் பார்த்த தலைமைச் சமையல்காரர், “சூத்திரன் தொட்ட பாத்திரத்தை ஏன் தொட்டாய்?” என்று கூறிக் கண்டித்தார்.

அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யசாமி ஆத்திரம் அடைந்து சோற்றுக் கையுடன் சமையல்காரப் பார்ப்பனர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். “சூத்திரன்’’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி ! என்னும் சொலவடை சொற்றொடர் இவ்வாறு தோன்றியதே ஆகும்.
குடிஅரசு (இதழ்), திராவிடநாடு (இதழ்) போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். அவை பெரும்பாலும் இந்து சமயப் புராணப் புரட்டுகளையும், இதிகாசங்கள், இந்துமத விழாக்கள் ஆகியவற்றின் பொருந்தாத மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதாக இருந்தன. 1929 ஆண்டு முதல் பல மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பேசினார்.
கைவல்யசாமி கோபிச் செட்டிப்பாளையத்துக்கு அருகில் பங்களாபுதூரில் 1953 ஆம் ஆண்டில் காலமானார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *