எங்கு சென்றாலும் மதவாதக் கண்ணோட்டமா? அமெரிக்காவில் ‘இந்தியா நாள்’ அணிவகுப்பில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெற எதிர்ப்பு ஏன்?

Viduthalai
1 Min Read

நியூயார்க், ஆக. 20- என்பிசி செய்தி சேனல் வெளியிட்ட செய்தி அறிக்கையின் படி, நியூயார்க் நகரில் நடைபெறும் இந்திய சுதந்திர நாள் அணிவகுப்பில் ராமன் கோவில் அலங்கார ஊர்தி காட்சிப் படுத்தப்படுவதற்கு பல தெற்காசிய அமெரிக்க அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தெளிவாக முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.

அலங்கார ஊர்தியின் விளம்பரத் திற்காக உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவில், அயோத்தியின் ராமன் கோவிலின் பெரிய மாதிரி காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நியூயார்க் அதன் ஒட்டுமொத்த தெற்காசிய சமூகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறு கின்றனர்.

அவர்களது கருத்துப்படி, “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பிரதிநிதிகள், எங்கள் பெரிய நகரத்தின் தெருக்களில் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கொண்டாட்டங்களை மேற்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம், இருப்பினும், இதுபோன்ற பொதுக் கொண்டாட்டங்களில் பிரிவினை அல்லது மதவெறியின் சின்னங்கள் இருக்கக் கூடாது.”

செய்தி முகமையான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சில அமெரிக்க அமைப்புகள் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஆகியோருக்கு கடிதம் எழுதி, இந்த அணிவகுப்பு’ முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அது ‘மசூதி’ இடிப்பு நிகழ்வை கொண்டாடுவது போல் உள்ளது என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில், இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் மற்றும் மனித உரிமைகளுக்கான இந்து அமைப்பு ஆகிய அமைப்புகளும் இதில் அடங்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *