தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை அருகே சிலம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (வயது 20) என்ற மாணவர் நீட் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். மருத்துவக் கல்வி பெற முடியவில்லை என்னும் அழுத்தத்தால் இத்தகைய பலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களும், உச்சநீதிமன்றமும் ஏனோ கண்டு கொள்ளவில்லை.
படித்துச் செழித்து, சமூகத்துக்குப் பயன் தர வேண்டிய குருத்துகளைப் பலி கொண்டபடி தொடர்கிறது நீட் என்னும் கொடூரம். தமிழ்நாட்டில் இதுவரை 20–க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள்.
நீட் தேர்வுக்காக பண்ணைகளைப் போல பயிற்சி மய்யங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டு மரணம் அடைந்துள்ளனர்.
இத்தனைக்குப் பிறகும் இந்தக் கொடுமை நீடிப்பதை மக்கள் நலம் விரும்பும் எவரும் ஏற்கமாட்டார்கள். மாணவர்கள் ஒருபோதும் இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடாது; அரசு இந் நிலைக்கு மாணவர்களைத் தள்ளக் கூடாது.
மாணவர் தனுஷ் மறைவுக்கு நமது இரங்கலைத் தெரிவிக்கலாம்; அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு எப்படி ஆறுதல் சொல்வது? நீட்டை ஒழிப்பதற்கான நமது போராட்டத்தின் வெற்றியால் தான் அதைச் செய்ய முடியும்!
சென்னை
17.8.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்