மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச போர்முழக்கம்

3 Min Read

 பிஜேபி தேசபக்தியை பற்றிப் பேச வேண்டாம்! 

மணிப்பூரில் ‘பாரத மாதா’வைக் கொன்று விட்டீர்கள்; 

நீங்கள் தேச பக்தர்கள் அல்ல; தேசத் துரோகிகள்! 

அரசியல்

புதுடில்லி, ஆக.10 மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அவர் கருதவில்லை என்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான தாக்கீது வழங்கினர்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 ஆம் நாளாக நேற்றும் (9.8.2023) விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜக மக்களவை உறுப்பினர்கள் பேசினர். காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: 

எனக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவியை வழங்கிய மக்களவை தலைவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். நிவாரண முகாம்களை பார்வையிட்டு, அங்குள்ள பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடினேன். நமது பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவின் ஓர் அங்கம் என அவர் கருதவில்லை. மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூரில் பாரத மாதாவை நீங்கள் கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல. நீங்கள் தேசத் துரோகிகள். ராணுவத்தைப் பயன்படுத்தி மணிப்பூரில் ஒரே நாளில் அமைதியை நிலைநாட்ட முடியும். ஆனால், ஒன்றிய அரசு அதை செய்யவில்லை. அங்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். அதையே இப்போது அரியானாவிலும் செய்ய முயற்சிக்கிறீர்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்மிருதி இரானி பதில்: இதையடுத்து, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: 

எனக்கு முன்பு பேசியவரின் ஆக்ரோசமான நடத்தையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக ஒருவர் பேசுகிறார். அதை காங்கிரஸார் கைதட்டி வரவேற்கின்றனர். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. அது பிரிக்கப்படவில்லை. அதை பிரிக்கவும் முடியாது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறினர். எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர்.

விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது அவையில் உள்ளவர்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். பெண்கள் நிறைந்த ஒரு அவையில், பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஒருவர்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார். இதுதான் அவரது குடும்ப கலாச்சாரமா? 

இவ்வாறு ஸ்மிருதி பேசினார். 

அமித் ஷா குற்றச்சாட்டு: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியபோது, ‘‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மீது நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் முழு நம்பிக்கை உள்ளது. ஊழல், வாரிசு அரசியலுக்கு பிரதமர் மோடி முடிவுகட்டி உள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன’’ என்றார். மாலை வரை நீடித்த விவாதம் இன்றும் தொடர்கிறது. விவாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். அதன் பிறகு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *