* அறிவியல் மனப்பாங்கு, சீர்திருத்தங்களைப் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்!
இந்தியாவிலேயே இதனை முழுமையாகச் செய்வது திராவிடர் கழகமே!
ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்லுவோம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இந்தியாவின் வளர்ச்சிக்குக் கேடானவை ஜாதி, மதவெறி, மூடநம்பிக்கைகளே! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51-A(h) என்ற பிரிவு மக்களி டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது, சீர்திருத்தம் இவற்றைப் பரப்புவது, வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது. இதனைச் செயல்படுத்துவது இந்தியாவிலேயே திராவிடர் கழகமே! ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் – முதலில் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ற பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய ஜீவாதார உரிமைகள் மூன்றாம் பகுதியாக, அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h)
என்ன கூறுகிறது?
பிறகு, 1976 இல் தனி மனித அடிப்படை உரிமைகளை வற்புறுத்தினால் மட்டும் போதாது; அடிப்படைக் கடமைகளையும் குடிமக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையுடன் 4A என்ற பகுதி இணைக்கப்பட்டது.
அதில் கூறு (Article) 51-A என்ற பகுதி மிகவும் முக்கியமானதாகும்.
அதில் குறிப்பாக 51-A என்ற கூறுப் பிரிவு (h) என்பது மிகவும் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும்.
51-A பகுதி (h) என்ற பிரிவு கூறுவதாவது:
‘‘It shall be the duty of every citizen of India –
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform‘‘ என்பதாகும்.
இதன்படி,
இந்தச் சட்டத்தில் உள்ளவற்றை செயல்படுத்துவது – இந்தியாவிலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்!
ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை, அறிவியல் மனப்பாங்கு (The Scientific Temper), மனித நேயம் (Humanism), எதையும் ஆராய்ந்து அறியும் ஊக்கம் (Spirit of Inquiry) அத்துடன் சீர்திருத்தம் (Reform) ஆகியவற்றை வளர்த்தல் முக்கிய கடமை என்று கூறுகிறது!
அறிவியல் மனப்பாங்கும், கேள்வி கேட்டு ஆராய்ந்த உணர்வும்தான் இன்றைக்கு நாம் அறிவியல் தொழில்நுட்ப விளைவால் அனுபவிக்கின்ற அத்தனை வசதிகளுக்கும் மூல காரணம் ஆகும்!
அந்த அறிவியல் மனப்பாங்கை ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்று அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தினாலும், அதன் செயற்பாடு சற்றும் முனைப்பின்றி, வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது!
இந்தியாவிலேயே திராவிடர் கழகம் ஒன்றுதான் ஓர் இயக்கமாகவே (Movement) மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை, மனிதநேயத்திற்கு எதிரான ஜாதி வெறி, மதவெறி இவற்றிற்கு எதிரான பிரச்சாரங்களைத் தன்னுடைய அன்றாடப் பரப்புரைப் பணியாக,
1. பேச்சு (உரைகள்)
2. எழுத்து (ஏடுகள், நூல்கள்)
3. அறப்போராட்டங்கள்மூலம் பரப்பி வருகின்ற கார ணத்தால், தமிழ்நாடு ”பெரியார் மண்ணாக” இருப்பதன் அடிப்படையாகும். முந்தைய பல மதக் கலவரங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்றபோதும்கூட, தமிழ்நாடு அன்று முதல் இன்றுவரை அமளிக்காடாக ஆக்கப்படாத, அமைதிப் பூங்காவாக உள்ளது!
இந்தப் பணியை அரசியல், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, பகுத்தறிவாகிய ஆறாம் அறிவின் முக்கியத்தை விளக்கி, மக்களிடையே சமத்துவமும், சகோதரத்துவமும், அறிவுச் சுதந்திரத்தையும் ஏற்படுத்த முடியும்.
இப்படிப்பட்ட பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் இடையறாது செய்து, அறிவியல் மனப்பாங்கை ஏற்படுத்தும் மக்கள் இயக்கமாக தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு வழிகாட்டும் உலக இயக்கமாகவே இன்று வளர்ந்து வருகிறது!
‘‘அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை‘‘
என்ற புரட்சிக்கவிஞரி்ன கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தந்து கொண்டுள்ள இயக்கம் – நம் இயக்கம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே
தந்தை பெரியார் சொன்னார்!
அரசமைப்புச் சட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது (அது எழுத்தில் மட்டுமே) – அதனை செயல்வடிவத்தில் நிலைப்படுத்த சுமார் 100 ஆண்டு களுக்கு முன்பே, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் என்ற பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி இயக்கத்தினை ஓர் கட்சியாக (Party) தொடங்காமல், ஓர் இயக்கமாக (Movement) ஆக்கினார். அதன்மூலம் ஒரு பெரும் சமூக மாறுதலை, ஒரு துளி ரத்தம் சிந்தாத அமைதிப்புரட்சியாக்கி, சமூக மாற்றத்தையும், ”அனைவருக்கும் அனைத்தும்” உரியது; ”யாவரும் கேளிர் – உறவினர்” என்ற மனித ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் உருவாக்கும் மனித குல அறிவு விடுதலைக்குப் பாடுபடும், இந்த அறிவியல் இயக்கம் எதிர்நீச்சல் அடித்து வெற்றி காணுகிறது!
மாற்றம் என்பது வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை யாகும்.
மூடநம்பிக்கை, முன்னேறவிடாத பழைமைப் பாசியில் உழல வைத்து, மனித குலத்தைப் பாழாக்கி, பலியாக்கும் ஒரு தந்திர சூழ்ச்சி, கருவியாகும்!
ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கை, ஜோதிடம், சகுனங்கள் என்ற போதையால் தமது அறிவை யும், காலத்தையும், பொருளையும் மனிதர்கள் விரயப்படுத்துகிறார்கள்!
குடிகாரனுக்குப் போதை போல மத போதை!
குடிகாரனுக்குப் போதை காரணமாக அதை விட முடியாததோடு, தீங்கையும் உணர முடியாமல், முரட்டுப் பிடிவாதத்தோடு நாளும் குடித்து, உடல், உயிர் நலம் கெடுதிக்கு விரைந்து செல்வதைப்போல், பகுத்தறிவுக்கு இடம் தராது, ஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைப் பண்டிகைகள், பழக்கங்கள், சடங்கு சம்பிரதாயம் என்ற கண்ணிவெடிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு அ(றிவு)றவழிப் பரப்புரையைச் செய்தால்தான், 51-A(h) போன்றவற்றிற்கு உயிரூட்ட முடியும்.
அதனால் நம் சமூகம் விழிப்புற்று எழுந்து, உலகின் முன்னணி வளர்ச்சியைப் பெற முடியும். எனவே, முன்னேற்றத்திற்கு எவை, எவையெல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனவோ அவற்றை உணர்த்திட கனிவான, கண்ணியமான முறையில் பரப்புரை செய்யும் அரும்பணியை கழகப் பேச்சாளர்கள் வருகின்ற 19 ஆம் தேதிமுதல் 100 கூட்டங்களின்மூலம் செய்யவேண்டியது நமது இன்றியமையாக் கடமை யாகும்!
இதி்ல் கட்சி இல்லை,
ஜாதி இல்லை,
மதம் இல்லை,
இவற்றில் மானுடத்தின் வளர்ச்சியும், வெற்றியுமே அடங்கியுள்ளது என்பதை உணருங்கள்!
”தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்; அவரது கல்லூரி வகுப்பு மாலை நேரங்களில் தொடங்கும்” என்ற அண்ணாவின் கூற்றுக்கேற்ப, தந்தை பெரியார் விட்ட பணியை, சுயமரியாதை இயக்கம் தொட்ட தொண்டை நாம் தொடருவோமாக!
ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் ஒருங்கிணைந்து ஈரோட்டுப் பாதையை விரிவாக்குவோம்!
ஒத்தக் கருத்துள்ள முற்போக்குச் சிந்தனை யாளர்களையும், செயல்வீரர்களையும் ஒருங்கிணைத்துப் புதியதோர் சுயமரியாதை, சமதர்ம, சமூகநீதி உலகமைக்க இப்பிரச்சார மழை அடைமழையாக பட்டிதொட்டி, நாடு, நகரம் எங்கெங்கும் பெய்யட்டும்!
பகுத்தறிவு வெள்ளம் பாயட்டும்!
வெற்றி நமதே!
இத்தொண்டு பரவினால், ஜாதி, பெண்ணடிமை, சாமியார்கள் அவதாரம், மூடநம்பிக்கை நோய்கள் பூண்டற்றுப் போகும். புதியதோர் பாதையை நாம் விரிவான ஈரோட்டுப் பாதையாக அயர்வின்றி உற்சாகம் பொங்க உழைத்து அமைப்போம்!
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
சென்னை
16.8.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்