‘கிரீமிலேயர்’ மீதான தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய சட்டம் கொண்டுவர மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஆக.11 ‘கிரீமிலேயா் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்கான(எஸ்.சி.,எஸ்.டி.) இடஒதுக்கீட்டை மறுக்க நினைக்கும் உச்சநீதிமன்றத்தின் யோசனை கண்டிக்கத்தக்கது; இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமா்வு 6:1 என பெரும்பான்மை தீா்ப்பை ஆக. ஒன்றாம் தேதி வழங்கியது. இந்த அமா்வில் இடம்பெற்ற நீதிபதி பி.ஆா்.கவாய், எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலும் கிரீமிலேயா் எனப்படும் பொருளாதாரத்தில் மேம்பட்டவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காமல் இருக்க மாநில அரசுகள் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 9.8.2024 அன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரி வில் கிரீமிலேயா் நடைமுறை கொண்டுவரப்படாது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே டில்லியில் செய்தியா ளா்களிடம் நேற்று (10.8.2024) கூறியதாவது:
கிரீமிலேயரை கொண்டு வர விரும்புவதன் மூலம் யாருக்கு சலுகை அளிக்க உச்சநீதிமன்றம் விரும்புகிறது? கிரீமிலேயா் யோசனை மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகையை மறுத்து, ஆண்டாண்டு காலமாக சலுகையை அனுபவித்து வருபவா்களுக்கு வழங்க விரும்புகிறீா்கள்.
கிரீமிலேயா் விவகாரத்தை எழுப்பியதன் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரை உச்சநீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. தீண்டாமை இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் போராடுவோம்.

இந்த விடயத்தில் உச்சநீதி மன்றத்தின் தீா்ப்பு வியப்பை அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் உயா் பதவிகளில் இருந்தாலும்கூட புறக்கணிப்பை எதிர்கொள்கிறார்கள்.

இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது. பொதுத் துறைப் பணிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்கிவிட்டது. அதில் ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வேலை கிடைப்பதில்லை.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் கிரீமிலேயா் நடைமுறை கொண்டுவரப்படாது என ஒன்றிய அமைச்சரவை முடிவு எடுத்திருக்கிறது. இது போதாது. கிரீமிலேயா் நடைமுறை அமல்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்ய வேண்டும் என்றார் அவா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *