மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தந்தை பெரியாரை முதலில் குறிப்பிட்டு தனது முதல் பேச்சைத் தொடங்கினார்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கூறிய தந்தை பெரியாரை நினைவு கூர்ந்து எனது உரையைத் துவங்குகிறேன்
“நான் தமிழ்நாட்டில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக மயிலாடுதுறை தொகுதி மக்களால் மக்க ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன் நான் சுயமரியாதை உள்ளவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.”
மயிலாடுதுறையில் அனைத்து மதத்தவர்களும் சமூகநல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர். இங்கு ஆதீ னங்கள், கோவில்கள், தேவாலயங்கள், இஸ்லாமிய வழிப் பாட்டுத்தலங்கள் அனைத்தும் உள்ளன. மயிலாடுதுறை மக்களுக்குச் சேவை செய்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
15-ஆவது நிதி ஆணையம் ஒன்றிய அரசு 42 சதவீத வருமான வரி வசூலை மாநிலங்களுக்கு வழங்க வேண் டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஒன்றிய அரசு வெறும் 30 சதவீதமே வழங்கி வருகிறது. இது மாநிலங்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஒன்றிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியில் தனது பங்கைக் குறைத்து வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநிலங்கள் 40 சதவீத பங்கை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கல்வி திட்டங்க ளுக்காக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
தமிழ்நாடு புயல் பேரிடரை எதிர் கொண்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதி உதவி வழங்கவில்லை. ஆனால் பாஜகவினர் வெள்ளச் சேதத்தை பார்வையிடவருவது போல் வந்து வாக்கு வங்கி செய்யும் அரசியல் சுற்றுலாத்தலமாக அவர்கள் மாற்றி உள்ளனர்
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சம பொறுப்பு உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 132 கோடி இந்தியர்களின் பொருளாதார மற்றும் சமூக நலனை முன்னேற்றுவதற்கு மாநிலங்கள் சிறந்த இடமாக உள்ளன. ஆனால் ஒன்றிய அரசு மாநிலங்களை ஒடுக்குகிறது. அதனால் 132 கோடி இந்தியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு ஒருவருக்கொருவர் பேசுவதற்கும் ஒன்றிய அரசுடன் பேசுவதற்கும் எந்தத் தளமும் இல்லை. தேசிய வளர்ச்சிக் கவுன்சில், தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில், மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில், திட்டக்குழு ஆகியவை அனைத்தும் கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய அரசால் அழிக்கப்பட்டுள்ளன.
50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த வேலையின்மை பிரச்சினையை பற்றி பேசாமல் இருக்க முடியாது. பல இளைஞர்கள் என்னிடம் இந்த பிரச்சினையை பற்றி பேசும்படி கேட்டுள்ளனர். பிரதமர் தனது அரசு
8 கோடி வேலைகளை உருவாக்கியதாக கூறுகிறார். ஆனால் அதே தரவுப் படி, 4 கோடி வேலைகள் தற்காலிக வேலைகளாக உள்ளன. இந்தியாவில் ஒரு நாளைக்கு
1 லட்சம் வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்ற அரசின் கூற்று நம்பமுடியாதது. அது ஒரு மணி நேரத்திற்கு 474 வேலைகள், ஒரு வினாடிக்கு 69 வேலைகள் என்பதாக பொருள்படும். இது சாத்தியமற்றது.
மூன்றாவதாக, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். அதாவது 10 ஆண்டுகளில் 20 கோடி வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அரசு 8 கோடி வேலைகளை மட்டுமே உருவாக்கியதாக கூறுகிறது. இது 12 கோடி வேலைகள் குறைவாகும்.
இந்திய அரசாங்கம் சிறு குறு தொழில்களில் முதலீடு செய்யவில்லை.
இவர்கள் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு ஜி. எஸ்.டி., எவ்வித முன்னேற்பாடும் இல்லாத கரோனா முழு அடைப்பு உள்ளிட்ட தொலைநோக்குப் பார்வை யில்லாமல் கொண்டுவந்த திட்டங்களால் இந்திய பொருளாதாரம் செயலிழந்துள்ளது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை சிறுகுறு தொழிற்சாலைகளை உருவாக்குகின்றன. அதேபோல், 63 லட்சம் முறைசாரா துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
1.6 கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அதே காரணத்தால் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அரசாங்கம் 500 நிறுவனங்களை மட்டுமே ஆதரிக்கும் என்று பரிந்துரைக்கிறது என்று தனது 10 நிமிட உரையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா குறிப்பிட்டார்.