சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

2 Min Read

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது.

இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.

27.11.1927- குடிஅரசிலிருந்து…

ஒரு சந்தேகம்

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அன்னிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள். இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது, ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத் தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப் பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.

27.11.1927 – குடிஅரசிலிருந்து…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *