உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!
பெங்களூரு, ஆக.6- பெங்களூ ருவில் நடைபெற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கலந்துகொண்டார்.அப்போது, பேசிய அவர்,இன்றைய காலகட்டத்தில் சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக உள்ளதாகவும், தாங்கள் செய்யக்கூடாத செயல்களை அவர்கள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆளுநர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகிவருவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் நீதிபதி நாகரத்னா கூறினார்.
ஆளுநரின் நடுநிலைமை குறித்து அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களைமேற்கோள்காட்டி பேசியநீதிபதி நாகரத்னா, ஆளுநர் பதவி நல்லிணக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கும் என்று நினைத்ததால் அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆளுநர்கள் தமது கடமைகளை உணர்ந்து நன்றாக செயல்பட்டால் முரண்பட்ட வர்களிடையே ஒருவித புரிதலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆளுநர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும், கட்சி விவகாரங்களுக்கு ஆளுநர்களை பயன்படுத்தக் கூடாது என்பதே அரசியல் நிர்ணய சபையின் முக்கிய ஆலோசனையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பலப்படுத்த, அரசியல் சாசன முகவுரையில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சி, சகோதரத்துவம்,அடிப்படை உரிமைகள், கொள்கை ரீதியான நிர்வாகம் ஆகிய நான்கையும் வலியுறுத்த வேண்டும் என்றும், மாநில அரசுகள் திறனற்றவை என்றோ, கீழ் படிந்தவையாகவோ கருதக்கூடாது என்றும், அரசியலமைப்பின்படி ஆட்சி என்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி நாகரத்னா, ஆளுநர்கள் ஒருசார்பான, அற்பத்தனமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மாநில ஆளுநர்களுக்கு எதிராக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா இக்கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.