கும்பகோணம் வடித்த கொள்கைத் தீர்மானங்கள்! 

Viduthalai
4 Min Read

கும்பகோணத்தில் நேற்று (4.8.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகத்தினர் வருகை தந்தனர். மண்டபமே நிரம்பி வழிந்தது.

முதல் தீர்மானம் – இரங்கல் தீர்மானம். அரும்பெரும் தோழர்கள் (தஞ்சைப் பொதுக்குழுவுக்குப் பின்னர் 23.3.2024க்குப் பின்) மறைந்தனர். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இயற்கைப் பேரிடரால் கேரள மாநிலம் வயநாட்டில் கண்மூடிக் கண் திறப்பதற்குள் மரணித்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2024–2025ஆம் ஆண்டு என்பது இயக்க வரலாற்றிலும் தமிழ் நாட்டின் வரலாற்றிலும் முத்திரை பதித்த பல நூற்றாண்டு விழாக்களை உள்ளடக்கியதாகும்.

வைக்கம் போராட்டம், சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் துவக்கம், சர்ஜான் மார்ஷல் குழுவினரால் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டது என்ற வகையில் நூற்றாண்டுகளைக் கொண்ட கால கட்டம் இது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கப்பட்ட – நடத்தப்பட்ட – நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மீண்டும் ஒரு முறை வரலாற்றில் பதிவு செய்யவும், புதிய தலைமுறையினருக்கு புத்தாக்கப் பாடங்களை எடுத்துக் கூறவும், வரலாற்றைத் திரிபுவாதம் செய்யும் வன்கணாளர்களின் புரட்டுகளைப் புரட்டித் தள்ளி ஆழக் குழியில் புதைக்கவுமான வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகம் நேர்த்தியோடு, கடமை உணர்வோடு நிகழ்த்தியிருக்கிறது என்பதில் அய்யமில்லை; நாளைய உலகின் வரலாற்று அறிஞர்களுக்கு கழகம் வைத்துச் செல்லும் ‘வைப்பு நிதி’ என்றே சொல்ல வேண்டும்.

வைக்கம் போராட்டத்திற்கும், தந்தை பெரியாருக்கும் எவ்வித் தொடர்பும் இல்லை; ஏதோ இடையில் அவர் வந்தார் – சென்றார் என்று இருட்டடிக்கும் இன எதிரிகளும், விபீடணர்களும் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இவர்களின் முகத்திரையைக் கிழிக்காமல் கடந்து செல்வோமேயானால், கலாச்சாரப் படை எடுப்பின் மற்றொரு அங்கமாகவே இது அமைந்து விடும்.

பிஜேபி ஆட்சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முரளி மனோகர் ஜோஷி இருந்தபோது சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று நிலை நிறுத்த  – தம் அதிகார ஆணவத்தால் ஒரு தில்லுமுல்லு செய்ததை மறக்க முடியுமா?

திராவிட நாகரிகத்துக்குச் சொந்தமான காளையை குதிரையாக வரைகலையால் (Graphic) மாற்றிக் காட்டவில்லையா?

திராவிடம் – ஆரியம் என்பதெல்லாம் வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சி என்று எழுதும், பேசும் எத்தர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

பார்ப்பனர்களும் சங்பரிவார்களும் தூக்கிப் பிடிக்கும் மனுதர்மத்திலேயே ‘திராவிடம்’’ வருகிறதே!

“பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டனர்’’ (மனுதர்மம் – அத்தியாயம் 10 சுலோகம் 44)

இந்த ஆதாரத்திற்கு என்ன சொல்லப் போகிறார்கள் ஆரிய – பார்ப்பனக் கூட்டத்தார்!

இந்தியாவின் தேசியக் கீதத்திலேயே ‘திராவிட உத்கல வங்கா’ என்ற வருகிறதே – வயிற்றில் அடித்துக் கொள்ளப் போகிறார்களா?

நூறாண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும், ‘குடிஅரசு’ வார இதழும் அவ்வப்போது தக்க ஆதார ஆயுதங்களால் ஆரியர்களின் அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகளின் வாலை ஒட்ட நறுக்கி வந்திருக்கின்றன.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஓராண்டு கொள்கை ரீதியாக – காலத்துக்கேற்ற யுக்திகளோடு பிரச்சாரப் பெரு மழையாகப் பெய்திடுவோம் என்று குடந்தைத் திராவிடர் கழகப் பொதுக் குழுவின் இரண்டாவது தீர்மானம் கூறுகிறது.

பிரச்சாரம் என்பதில் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், வட்டார மாநாடுகள், மாணவர்கள் மத்தியில் பெரியார் ஆயிரம், இயக்க நூல்களைப் பரப்புதல், துண்டறிக்கைகளை வெளியிடுதல், புத்தகக் கண்காட்சிகள் நடத்துதல், சமூக வலை தளஙகளைத் தக்க முறையில் பயன்படுத்துதல், பெரியார் விஷன் ஓடிடிக்குச் சந்தா சேர்த்து நேயர்களின் எண்ணிக்கையை விரிவாக்குதல், இயக்க ஏடான ‘விடுதலை’ இதழ்களான, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’, ‘பெரியார் பிஞ்சுகளுக்குச் சந்தாதாரர்களைப் பெருக்குதல் – இன்னோரன்ன ஆக்க ரீதியான பணிகள் அங்கு இங்கு எனாதபடி ஆக்கம் தரும் பெருங்காற்றாக நாடெங்கும் சுழன்றடிக்கச் செய்வோம்! தமிழ்நாட்டில் நடக்கும் இந்த அடர்த்தியான பணிகளை உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பெரியார் விஷன் நேரடியாகக் கொண்டு செல்லும்.

குடந்தைத் தீர்மானங்கள் வெறும் எழுத்துகளின் கூட்டல் அல்ல! செயலாக்கத்தின் தீவிர துல்லியமான அறிவுத் தாக்கம் ஆகும்.

தேர்தல், அரசியல் பக்கம் கால் பதிக்காமல், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அறிவியல் வரலாற்றுக் கூற்றுப்படி, மாற்றத்தை உருவாக்க மார்தட்டி எழும் இளைஞர் பட்டாளம் திராவிடர் கழகத்தை நோக்கி அண்மைக் காலத்தில் பாய்ந்து வரும் வெள்ளமாக வருவதைப் பார்த்து வருகிறோம் – மகிழ்கிறோம்.

பயன்படுத்துவோம் – கழகப் பொறுப்பாளர்கள் தக்க முறையில் ஆற்றுப்படுத்துவார்கள். தலைவர் ஆசிரியரும், தலைமைக் கழகமும் இவற்றைக் கண்காணிப்பாளர்கள்; தேவைப்படும் நேரங்களில் எல்லாம் களத்திலும் இறங்குவார்கள்!

குறிப்பாகவும் – சிறப்பாகவும் – சொல்லப் போனால் குடந்தைப் பொதுக் குழு ஒரு திருப்பு முனை – அதன் தீர்மானங்களை செயல்படுத்துவோம் – செயல்படுத்துவோம்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *