போபால், ஆக. 4- காவடி யாத்திரை சென்று வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் கங்கை நீரை ஊற்றுவதற்கு சிவலிங்கம் செய்துகொண்டு இருந்த போது கோவில் மதில்சுவர் இடிந்து விழுந்து 8 குழந்தைகள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். பலியான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் ஷாப்பூரில் ஹரதோல் கோவில் உள்ளது. இக்கோவிலில் காவடி யாத்திரை சென்றவர்கள் கொண்டுவரும் கங்கை நீரை உற்றுவதற்கு வீட்டுக்குவீடு சிவலிங்கம் செய்து இங்கு கொண்டுவந்து வைப்பார்கள். கோவில் வளாகத்திலும் களிமண்ணால் சிவலிங்கம் செய்வார்கள்
இன்று ஞாயிற்றுக்கிழமை (4.8.2024) விடுமுறை நாளாக இருப்பதால், 8 முதல் 14 வயதுடைய குழந்தைகளும் சிவலிங்கம் உருவாக்க அதிக அளவு எண்ணிக்கையாக வந்திருந்தனர். அவர்கள் சிவலிங்கம் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, கோவில் வளாகத்திலிருந்த அய்ம்பது ஆண்டுகள் பழைமையான கோவிலில் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
அந்தப்பகுதி சிவலிங்கம் உருவாக்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது நேரடியாக விழுந்தது, இதனால் எட்டுக் குழந்தைகள் இறந்தனர். இந்தகோர நிகழ்வு நடந்த பிறகு அங்கே பெருங்கூச்சல் எழுந்தது. உடனடியாக சுவரின் சிதிலங்களை அகற்றும் பணிகள் தொடங்கியது, அதன் கீழ் சிக்கியிருந்த குழந்தைகளை வெளியே கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கோவிலின் ஒரு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது, மத்தியப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 104 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் கோவிலின் பழைமையான கட்டடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்துசரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு வெளியே கூட்டம், சுகாதார வசதி இல்லாமல் மக்கள் கோபம்
விபத்திற்குப் பிறகு மக்கள் காயமடைந்தவர்களை ஷாப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர், ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை ஒரே ஒரு தூய்மைப் பணியாளர் மட்டுமே இருந்தார். இதனால் மக்கள் கோபம் கொண்டு மருத்துவமனையை சூறையாடத்துவங்கினர்
மக்கள் கூறியதாவது, இங்கு உள்ள மருத்துவர்கள் அவ்வப்போது மட்டுமே வந்து கையெழுத்து போட்டுச் சென்றுவிடுவார்கள். மருத்துவமனைக்கு குழந்தைகள் கொண்டு வரப்பட்டபோது, தூய்மைப்பணியாளர் மட்டுமே இருந்தார். செவிலியர்கள் கூட இங்கு இல்லை என்று கூறினர். மாநில முதலமைச்சர் இதுவரை இறந்தகுழந்தைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை 3.8.2024 அன்று இதே மாவட்டத்தில் பள்ளிக்கூட சுவர் இடிந்துவிழுந்து 4 மாணவர்கள் பலியான நிலையில் மீண்டும் ஒரு கோரவிபத்தில் குழந்தைகள் பலியாகி உள்ளனர்.