வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம்,ஆக 4 கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 148 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மேலும் 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிலச்சரிவு நடந்த பகுதிகளில் வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கேரள முதலமைச்சர்பினராயி விஜயன் தெரிவித்தார்.

காணாமல் போன 200 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 6-ஆவது நாளாக மீட்பு பணி நீடித்து வருகிறது. மண்ணில் ஆழமாக புதைந்தவர்களை கண்டறிய நவீன ரேடார் கருவிகளை கேரள அரசு கோரியது. இதையடுத்து, ராணுவ வடக்கு மண்டலத்தில் இருந்து ஒரு ரேடார் மற்றும் டெல்லியில் இருந்து 4 ரீகோ ரேடார்கள் மற்றும் ஆபரேட்டர்கள் விமானத்தில் வரவழைக்கப்பட உள்ளனர்.

நிலத்துக்குள் ஆழ்ந்து ஆய்வு செய்யும் திறன் கொண்ட டிரோன் மற்றும் ரேடார்களை ராணுவம் பயன்படுத்த உள்ளது. இனிமேல் உடல்களை மீட்கவும், அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்கவும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *