தூத்துக்குடி, ஆக. 4- ஒன்றிய பா.ஜ.க. அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நேற்று (3.8.2024) தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், தூத்துக்குடித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆர்இசி லிமிடெட் இயக்குநர் திருப்பதி நாராயணன், அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன்பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி ஒன்றிய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியதாவது;
ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது. தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தபோதும், முன்கூட்டியே உரிய எச்சரிக்கையை கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். அதே போல கேரள நிலச்சரிவுக்கும் கூறு கிறார்கள். இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்திருக்கிறார். அவர்கள் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உதவி செய்வதில்லை, மாறாக முன் னெச்சரிக்கை செய்துவிட்டோம் என்று கூறி வருகிறார்கள். மேலும், மாநிலங்களுக்கு நிதி தராமல் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங் களுக்காக இழுத்தடிக்கிறது என்று கூறினார்.