கலைஞரிடம் என்னை அறிமுகம் செய்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

viduthalai
11 Min Read

பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்து நம்மை உயர்த்தியவர் தந்தை பெரியார்
புதுக்கோட்டை கவிதைப்பித்தன் பேச்சு!

 

திருச்சி, ஜூலை 20- கலைஞரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!, பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்து நம்மை உயர்த்தியவர் தந்தை பெரியார் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் பேசினார்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டம், திருச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 17.07.2024 அன்று, திருச்சி சீனிவாசா மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று கவிஞர் கவிதைப்பித்தன் பேசியதாவது:

யாரிந்த கருப்புச் சட்டைக்காரர்கள்?

சூழ்நிலைக் காரணமாக விளம்பரங்கள் குறைவாகச் செய்யப்பட்டதால், மிகுதியான கூட்டம் வரவில்லை எனப் பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள்.‌ நான் இந்தக் கருத்தில் மாறுபடுகிறேன். அரங்கம் நிரம்பி வழிகிற கூட்டங்களில் இல்லாத தாக்கம், இதுபோன்ற சிறு கூட்டங்களில் நிறையவே இருக்கும் என நம்புகிறேன். அதுவும் பகுத்தறிவாளர் கழகத்தின் நிகழ்ச்சி என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. “உச்சிக் குன்றேறி உரக்க முழங்குவதற்கு” இது ஓர் சான்றோர் நிறைந்த அவையாகும்!

பொதுவாகக் கருப்புச் சட்டைகளைப் பார்த்தாலே மனித விரோதிகளுக்கு நடுக்கம் வரும். காரணம் அவர்கள் படிப்பவர்கள், சிந்திப்பவர்கள், ஆராய்ந்து முடிவு செய்பவர்கள், எவர் சொல்வதையும் அப்படியே ஏற்க மறுப்பவர்கள், பெரியார் வழிவந்தவர்கள், அண்ணா, கலைஞர், ஆசிரியரை ஏற்றுக் கொண்டவர்கள்! திராவிடச் சிந்தனை என்பதே தனித்தன்மை வாய்ந்தது. ஆயிரம் பேர் இருந்தாலும் கருப்பு சட்டைகள் நுழைகிறபோது, அனைவரின் கவனமும் அவர்களின் மீது இருக்கும்! பெரியார் ஏற்படுத்திய கொள்கைத் தாக்கம் அது!

ஆசிரியர் தந்த அறிமுகம்!

இங்கே கலைஞர் படத்தைத் திறந்த போது சிந்தையும், உடலும் சிலிர்த்துப் போனது. தலைவர் கலைஞரின் நேரடிப் பார்வையில் வளர்ந்தவன் நான். சட்டமன்ற வேட்பாளராக, உதயசூரியன் சின்னத்தில் 3 முறை நிறுத்தினார் கலைஞர். ஒருமுறை மட்டும், கலைஞர் அவர்கள் எதிர்பார்த்தவாறு செழுமையாக, முழுமையாகச் சட்டமன்ற உறுப்பினர் கடமையை நான் நிறைவேற்றினேன். அந்த மனநிறைவு எப்போதும் எனக்கு உண்டு!

இந்த வாய்ப்புகளை யாருடைய பரிந்துரையும் இல்லாமல் தலைவர் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதற்கு ஆழமான அடிப்படை ஒன்று இருக்கிறது. பல இடங்களில் இதை நான் பதிவு செய்துள்ளேன். ஆம்! இந்த ஒப்பற்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கியக் காரணம், தலைவர் கலைஞரிடத்தில் முதன்முதலில் என்னை அறிமுகம் செய்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான்!

ஆசிரியரின் அரிய பொது வாழ்வு!

“90 வயதில் 80 ஆண்டுகள் அரிய பொது வாழ்வு, துளியும் இல்லை மனச்சோர்வு, கண்ணார காணும் பொலிவும் வலிவும், கலந்து மிளிரும் எழிலோடு, நடமாடுகிறார் துணிவோடு!” என்று எல்லோரும் பிரமிக்க வைக்கும் வகையில், துள்ளிப் பாயும் காளையைப் போல் மேடைக்கு வருவதும், வாதங்களை எதிர்கொண்டு பகுத்தறிவுச் சொற்பொழிவு ஆற்றுவதும், எட்டுத் திசைகளிலும் சென்று திமுகவிற்கு அரணாக நிற்பதும் ஆசிரியரின் சிறப்பு!
அந்த வகையில் என்னுடைய புகழுக்கும், பெரு மைக்கும் ஆசிரியரே காரணம் என்பதால், வாழ்நாள் கடமைப்பட்டவன் நான்!

சாமிக்கு என்னடா தேரோட்டம்?

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் படித்தவன் நான். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. திருச்சி, மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு தோழர்கள் அடிக்கடி ஒன்றுகூடுவோம். பெரியார் திடலில் பணியாற்றிக் கொண்டே, மாநிலக் கல்லூரியில் முதுகலைப் படித்த தோழர் வீரராசு என்னுடன் திருச்சியில் படித்தவர். ஒருமுறை உணவகம் ஒன்றின் வாயிலில், எச்சில் இலைகளின் உணவை எடுக்கச் சில மனிதர்களும், சில நாய்களும் ஒருசேர நின்ற காட்சியைப் பார்த்தோம். எனக்கு 19 வயது இருக்கலாம். இதே பெரியார் சிலையின் கீழிருந்து எழுதினேன்.

“அச்சடிக்கும் கள்ள நோட்டு வெள்ளோட்டம், கோவில் அறைக்குள்ளே நடக்குது இந்தக் கொண்டாட்டம், எச்சிலைக்கு இந்த நாட்டில் போராட்டம், இதில் என்னடா சாமிக்குத் தேரோட்டம்” என இதே திருச்சியில் இருந்து எழுதினேன். அது முரசொலி, விடுதலை நாளேடுகளில் வந்தது. திருச்சிக்கு வந்துவிட்டால் நினைவுகள் விரிந்து கொண்டே போகும். பெரியாருக்குச் சிலை வைக்க வேண்டுமென, 1942 – லேயே “திராவிட நாடு” இதழில் எழுதியவர் அண்ணா! ஆனால் 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் சிலை திருச்சியிலே நிறுவப்பட்டது!

பகுத்தறிவு ஊற்றெடுக்கும் சிலை!

நம் உள்ளத்தில் நிலைத்திருக்கும் சிலை! பகுத்தறிவு ஊற்றெடுக்கும் சிலை! ‘கிழவன் அல்ல அவன் கிழக்குத் திசை’ எனத் தோழர் பொன்னரசு இங்கே பாடினார். தமிழ்நாட்டுக்கு அவர் கிழக்குத் திசை! அதேநேரம் தந்தை பெரியாரின் கிழக்குத் திசை திருச்சி. இங்கே ஓர் அரசுக் கல்லூரியும் தந்தவர் பெரியார்! அந்தக் கல்லூரியால் உருவான கல்வியாளர்கள், அறிவாளர்கள் ஏராளம், ஏராளம்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் பெரியாரைக் குறித்துப் பேச எவ்வளவோ செய்திகள் உள்ளன. பெரியார் 13 இலட்சத்து, 12 ஆயிரம் கி.மீ தமிழ்நாட்டைச் சுற்றி வந்தவர். 8600 நாட்கள் பயணம் செய்தவர். 21 ஆயிரத்து, 400 மணி நேரங்கள் பேசியவர்! ஒவ் வொரு ஆண்டும் அவர் பேசிய கூட்டங்களைக் கணக்கெடுத்தால், அதுபோன்ற வரலாறு இந்த உலகில் யாருக்குமே இருந்திருக்க முடியாது. உடல்நலம் குன்றி வேலூர் மருத்துவமனைக்குப் போவதற்கு முன்பு கூட, தியாகராயர் நகரில் பேசிவிட்டுப் போகிறேன் என இறுதி முழக்கத்தை முழங்கிச் சென்றவர்!

பெரியாரின் தியாகப் பெருவாழ்வு!

தந்தை பெரியாரைக் குறித்து மேலோட்டமாகவும், பெரியாரைப் பேசினால் பெரிய மனிதராகலாம் என்கிற குறுக்கு வழியிலும் சிலர் இருக்கிறார்கள். அவர் தியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். தாயார் இறந்த நேரத்தில் கூட, ஜோலார்பேட்டையில் பேசிக் கொண்டிருந்தார். அன்னை நாகம்மையார் உயிருக்குப் போராடிய நேரத்தில், திருப்பத்தூர் கூட்டத்தில் பேசினார். நாகம்மையார் இறந்தபோது கூட, 144 தடை உத்தரவை மீறி, திருச்சியில் கிறிஸ்தவ மதத் தோழர்களுக்குச் சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தார். இந்த வரலாறுகள் எல்லாம் சிலருக்குத் தெரியாது.

பெரியார் விருது பெற்றேன்!

நான் சில விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் கலைஞர் அவர்களால் வழங்கிய பெரியார் விருதையே பெருமையாகக் கருதுகிறேன். இந்த விருதை அறிவித்ததற்குப் பிறகு கலைஞர் இல்லம் சென்று, நன்றி கூற போனேன்.‌ கலைஞர் அவர்களோ, “என்னைப் பார்ப்பது இருக்கட்டும், ஆசிரியரைப் போய் பார்த்தாயா?”, என்றார். தங்களைச் சந்தித்து விட்டுப் போகிறேன் என்றேன். முதலில் அங்கே போய்விட்டு வா என்றார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நேரம் வாங்கிக் கொண்டு, பெரியார் திடலுக்கு விரைந்தேன். அங்கே ஆசிரியருடன் நடந்த விவரங்களைக் கூறி, நீண்ட நேரம் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். இறுதியாக விடைபெறும் போது, ஆசிரியர் என்னை அழைத்து ஒரு நாற்காலியில் அமரச் செய்தார். பின்னர், “இது பெரியார் அமர்ந்த நாற்காலி”, என்று கூறினார். மெய்சிலிர்த்துப் போனேன். எவ்வளவு பெரிய வாய்ப்பும், பெருமையும் ஆசிரியர் எனக்கு அளித்தார்கள்.

பெரியாரைப் பின்பற்றுவதே அழகு!

குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள் கூட, சாமியார்களுக்கு முன்னால் சமமாக அமர முடியாது. சில நேரங்களில் காலைத் தொட்டும் கும்பிடுவார்கள். ஆனால் பெரியார் வழி வந்த தலைவர்கள், எங்களைப் போன்றோரை எவ்வளவு உயரத்தில் வைத்து பார்த்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டும்! விவரம் தெரியாத சிலர் பெரியாரை இழிவு செய்வதாக நினைத்துக் கொண்டு எழுதியும், பேசியும், வருகிறார்கள். அதில் ஒருவர் பன்றி போல பெரியாரை வரைந்திருந்தார். என் முகநூல் பக்கத்திலே நான் ஒரு கவிதை எழுதினேன்.

“பன்றி போல் வடிவமைத்துப் பெரியாரை வரைந் தார்கள், பன்றியும் அழகாகிவிட்டது! வரைந்து மகிழ்ந்த பன்றிகளே! பெரியாரை நீங்களும் பின்பற்றுங்கள், அழகாகிவிடுவீர்கள்!” என முகநூலில் எழுதினேன். அவரை எதனுள்ளும் நீங்கள் அடக்க முடியாது. “நான் ஒரு பேச்சாளன் இல்லை, எழுத்தாளன் இல்லை, கருத்தாளன்” என்று கூறிக் கொண்டவர் அவர். சமுதாயத் திற்குத் தேவையான கருத்துகளை, புதிய பார்வையோடு சொன்னவர் பெரியார்!

அம்பேத்கர் விருது பெற்ற நல்லகண்ணு!

சமயத்தில் நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது கொடுக்கப்பட்டது. ஒரு ஜாதி தலைவர் கேட்டார், “நல்லகண்ணு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரா? அவருக்கு எப்படி கொடுக்கலாம்?”, என்றபோது வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலைஞர் பதில் சொன்னார். அம்பேத்கர் விருதை ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தான் வழங்க வேண்டும் என்கிற நியதி கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிற யாருக்கும் கொடுக்கலாம் என்றார் கலைஞர். தமிழ்நாட்டில் பல சரித்திர நிகழ்வுகளில் பங்கேற்று, சமத்துவச் சமுதாயம் படைக்கும் நல்லகண்ணு அவர்களுக்கு கொடுக்காமல், இதை வேறு யாருக்குக் கொடுப்பது என்று கேட்டார் தலைவர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிபதி!

1986இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக அறிவித்தது. திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இதில் பங்கேற்றன. தமிழ்நாடு முழுவதும் 57 நாட்கள் வரை தோழர்கள் சிறையில் இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த இராவணன் அவர்களின் பிறந்தநாளை‌ அப்போது சிறையிலே கொண்டாடினோம். அந்தப் போராட்டத்தின் போது நீதிபதி வெங்கடாசலம் அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

திராவிடர் இயக்கக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு அது!

“தாய்மொழியை உயர்வாகக் கருதுபவர்கள் தமிழ் மக்கள். அதன் வளர்ச்சியைக் கொள்கையாகக் கொண்டது திராவிடர் இயக்கம். அவ்வாறான தாய்மொழியை அழிக்கும் ஒரு மொழியை, களத்திலே நின்று, எதிர்ப்பைக் காட்டுவது தவறான செயல் அல்ல! இது அவர்களின் மொழிப்பற்றைக் காட்டுமே தவிர, பிற மொழியின் மீதான வெறுப்பைக் காட்டாது. எனவே இந்த மொழிப் பற்றாளர்களை வாழ்க! வாழ்க! என வாழ்த்தி, அவர்களை விடுதலை செய்கிறேன்”, என நீதிபதி வெங்கடாசலம் தீர்ப்புக் கூறினார்.

கலைஞரின் முதல் கையெழுத்து!

இதன் மூலம் ஆளுங்கட்சியால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார் நீதிபதி. அதேநேரம் 1989 இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே, நீதிபதி வெங்கடாசலம் அவர்களைத் தலைமை நீதிபதியாக இராமநாதபுரத்தில் நியமிக்கப்பட்டது தான்! உயர் நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டோர் கூட நீதிபதி இல்லையே எனப் பெரியார் வருத்தப்பட்ட போது, ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்த நீதிபதி வரதராஜன் அவர்களை எப்படி உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கலைஞர் அறிவித்தாரோ, அதேபோல இந்த நிகழ்வும் நடந்தது.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சிறப்பாக ஆட்சி செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அண்மையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் எனும் பல்லாண்டு காலப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் எண்ணற்ற செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கவிச்சுடர் கவிதைப்பித்தன் உரை நிகழ்த்தினார்.

மறைந்தும் வாழும் பெரியார், கலைஞர்!

முன்னதாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் படத்தினை, திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் திறந்து வைத்துப் பேசும்போது, இன்றைக்குப் பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பேசி வரும் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளாக உண்மை மற்றும் வரலாற்றுச் செய்திகளை மட்டுமே பேசி வருபவர்கள் திராவிடர் இயக்கப் பேச்சாளர்கள்.

உலகிலேயே இறப்பிற்குப் பிறகும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து வருபவர்கள் இரண்டே பேர். ஒருவர் பெரியார், மற்றவர் கலைஞர். எதிரிகள் அஞ்சி நடுங்க இதற்குக் காரணம் இருக்கிறது. பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியும், அவரது கொள்கைகள் உயிர்ப்போடு இருக்கின்றன. அவர் இறந்தவுடன் கொள்கையும் போய்விடும் எனக் கருதினார்கள். ஆனால் பல மடங்கு வீச்சாய் மாறும் என அவர்கள் நினைக்கவில்லை. அந்தக் கோபம், எரிச்சலும் தான் பெரியாரை நித்தமும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதேபோல கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களால், இன்றைக்குத் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாட்டை உலக அளவில் ஒப்பிட்டு, அதன் பெருமைகளைப் பேசும் நிலை வந்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட கலைஞரின் சாதனைகள், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்கிறதே என்கிற கோபம்தான் அவர்களைத் தன்னிலை மறந்து பேச வைக்கிறது.

ஆசிரியரின் நீட் ஒழிப்புப் பயணம்!

கால்பந்து ஆடத் தெரியாதவர்கள் பந்தை உதைப்பதற்குப் பதிலாக, காலை மிதிப்பதைப் போல பார்ப்பனர்களும், அவர்களின் அக்கிரகாரத்தில் தலைமை அலுவலகம் வைத்திருக்கும் நாம் தமிழர் போன்றோரும் எப்படியும் பேசட்டும்; அவர்களால் முடிந்தது, அவ்வளவுதான்! நான் என் பணியைச் செய்து கொண்டே இருப்பேன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்து, 21 இலட்சம் மாணவர்கள் காலை உணவை சாப்பிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அதேபோல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீட் தேர்வை ஒழிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் இருந்து 5 முனைகளில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்து, சேலத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றார்கள்.‌ எனவே கடந்த 100 ஆண்டுகளாக 3 விழுக்காடு பார்ப்பன ஹிந்துக்களிடம் இருந்து, 97 விழுக்காடு தமிழ் ஹிந்துக்களைப் பாதுகாத்து வருகிற அமைப்பாகத் திராவிடர் இயக்கங்களும், அதன் தலைவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்”, என வி.சி.வில்வம் பேசினார்.

பங்கேற்றோர்!

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பி.மலர்மன்னன் தலைமை வகித்தார். தலைவர் பா.லெ.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் இரா‌.மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளரும், திருச்சி மாவட்டப் பொறுப்பாளருமான கோபு.பழனிவேல் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்வில் மேலப்புதூர் வட்ட திமுக செயலாளர் இராஜன் பாபு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.மணியன், மாநகரத் தலைவர் மு.குத்புதீன், செயலாளர் பெ.கவுதமன், அமைப்பாளர் பொ.இராஜாராம், துணைச் செயலாளர் பி.ஜீவஜோதி, கண்ணந்தங்குடி கீழையூர் அரங்க.குமாரவேல், திராவிடர் கழக மாநகரத் தலைவர் ச.துரைசாமி, செயலாளர் ம.இராமதாஸ், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர், பெல் ம.ஆறுமுகம், கல்பாக்கம் அ.இராமச்சந்திரன், மு.பாலசுப்பிரமணியன், ஒளிப்படக் கலைஞர் பாண்டியன், பாடகர் பொன்னரசு, விடுதலை அரசு, பொற்செழியன், அறிவொளி காணொலி பொறுப்பாளர் தாமோதரன், முனைவர் ஜோ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி தலைவர் ரெஜினாமேரி, செயலாளர் சு.சாந்தி, மகளிர் பாசறைத் தலைவர் க.அம்பிகா, செயலாளர் த.சங்கீதா, துணைத் தலைவர் சே.வசந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாநகரப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜோ.பென்னி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *