சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 43ஆவது நிறுவன நாள் விழா சென்னையில் நேற்று (18.7.2024) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:
கிராமங்களில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், கிராமப் பொருளாதார வளர்ச்சியிலும் நபார்டு வங்கி முக்கியப் பங்காற்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 4,454 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.195 கோடியில் கணினிமயமாக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு நபார்டு வங்கி தமிழ்நாடு அரசுக்குஉதவ வேண்டும். இந்த வங்கி தொடங்கப்பட்ட நோக்கத்தை விட்டு விலகிவிடக்கூடாது. வர்த்தக நோக்கில் என்றும் செயல்படக்கூடாது. இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நபார்டு வங்கி ரூ.1.67 லட்சம் கோடி கடனுதவி வழங்கியுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுசங்கங்களின் வர்த்தக மேம்பாட்டுக்காக ரூ.265 கோடி கடனுதவி அளித்துள்ளது. ஊரக கட்டுமான மேம்பாடு, நீண்டகாலம் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.900 கோடி பாசனத் திட்டங்களுக்கு மட்டும் தரப் பட்டுள்ளது. இதன்மூலம் 25 லட்சம்ஏக்கர் பாசன வசதி பெற்று, ஆண்டுக்கு6.25 லட்சம் டன் உணவு தானியங்கள் கிடைத்துள்ளன.
கிராம சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.12,300 கோடி நிதி வழங்கப்பட்டு, 73 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக கிடங்குகள், குடிநீர்திட்டங்களுக்காக ரூ.5,300 கோடி வழங்கப்பட்டது. இதனால் 78 லட்சம் பேருக்கு தமிழ்நாடு அரசு தூய்மையான குடிநீரை வழங்குகிறது. நடப்பாண்டு தமிழ்நாடு அரசுக்கு நபார்டு வங்கி ரூ.8.3 லட்சம் கோடி வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், உணவு மற்றும் கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்டோர் பேசினர். நடப்பாண்டுக்கான நபார்டு வங்கி செயல்திட்டங்கள் குறித்த புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.