மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும், ஜூன் 23ஆம் தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும், ஜூலை 1ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வா தாரத்திற்காக மீன்பி டிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, அவர்கள் மீது கிருமிநாசினியையும் தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கியபோது, ஒன்றிய அரசு பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் அதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களை விடுவித்து தமிழ்நாடு அழைத்து வரவும், பிரச்சினையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.