நியூயார்க், ஜூலை 10- தமிழ் நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள் ளார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு அரசின் மருத்து வக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகா தாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. ஏழை மக்க ளுக்காக காப்பீட்டு திட்டத்தை மேனாள் முதலமைச்சர் கலைஞர் 2009ஆம்ஆண்டு தொடங்கினார். இதில், கடந்த ஜூன் மாதம் வரை ரூ.13,625 கோடி செலவில் செலவில், 1.4 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு செப். 15ஆம் தேதி 1,353 அவசர ஊர்திக ளுடன் ‘108’ அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும், அவசர ஊர்தி சேவை மய்யத்தை தொடர்பு கொள்ளலாம்.
சாலை போக்குவரத்து விபத்துக ளுக்கும் இலவச அவசர சிகிச்சை வழங்கும் ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் கடந்த மே மாதம் வரை ரூ.2.21 பில்லியன் செலவில் 2,52,981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை கொடையாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக் கள் கொடையாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உறுப்புக் கொடை செய்யப்பட்ட உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் 2021ஆம் ஆக.5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். மேலும், ‘மக்களைத் தேடி ஆய்வகம்’ திட்டம், ‘இதயம் காப்போம்’ திட்டம், ‘சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம்’, ‘தொழிலாளரைத் தேடி மருத்துவம்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.