செங்கல்பட்டு, ஜூலை 7- செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் உள்ள 1486 பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பள்ளியை சுற்றி புகையிலை குட்கா போன்ற பொருட்கள் விற்பனையை தடுத்தல், அங்கன்வாடி மய்யங்களில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், குழந்தை திருமணங்கள் சார்ந்த புகார்களை கண்காணித்தல் பள்ளியில் படிக்காமல் மாணவர்கள் வெளியில் இருப்பவர்கள் குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரித்தல், அனைத்து வகை பள்ளிகளில் கட்டமைப்பை உயர்வாக்குதல், பள்ளிகளில் கல்வி முறை மற்றும் தரத்தினை உயர்த்துதல், மாணவர் சேர்க்கை, மாணவர் வருகை பதிவினை கண்காணித்தல், பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணித்தல், வருகை புரியாத மாணவர்களை கண்காணித்தல், உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதிகள். மதிப்பீட்டு புலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சிறப்பு மதிப்பீடு பள்ளி பார்வை, வகுப்பறை உற்று நோக்கல், எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி வானவில் மன்றம், முன்னாள் மாணவர்கள் இணைப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணித்து ஆய்வு கூட்டம் நடத்தி பள்ளி மாணவர்களின் தொடர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தனியார் கார்ப்பரேட் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சமூக பாதுகாப்பு நிதியினை வைத்து அரசு பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றும் கூறினார். பள்ளிக்கு சென்று வர அரசு பேருந்துகள் சரி வர இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்த அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியாக சென்றடைகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், மற்றும் அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள், குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.