மைசூரு, ஆக. 22 தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் டயருக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர்.
கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்கைபடி நீர் பங்கிடப்பட்டு வருகிறது. ஆனால் அவ் வப்போது தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆகஸ்டு வரை தமிழ்நாட்டிற்கு 52 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை கருநாடகம் காவிரியில் திறந்திருந்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு கருநாடகம் தண்ணீர் திறந்துவிடாமல் இருந்தது.
தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கருநாடகத்தில் காவிரிப் படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த நீர் போதாது எனவும், கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு கடந்த 14-ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கருநாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட் களாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கும் மேல் காவிரியில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு கருநாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர், விவசாய அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து மண்டியாவில் போராட்டத் துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று (21.8.2023) மண்டி யாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
மண்டியா டவுன் சஞ்சய் சர்க்கிள் பகுதியில் நடந்த போராட் டத்தில், மண்டியா நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா, மேனாள் ஒன்றிய அமைச்சர் சதானந்தகவுடா, மேனாள் அமைச்சர் அஸ்வத்நாராயண், தேஜஸ்வி சூர்யா நாடாளுமன்ற உறுப்பினர். உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பதால் மாநிலத்தின் நலனை காங்கிரஸ் கட்சி தியாகம் செய் துள்ளதாகவும் முழக்கம் எழுப்பினர். கருநாடக அரசை கண்டித்து பதாகை களையும் வைத்திருந்தனர். மாநில அரசு மக்களை முட்டாளாக்குவதாக கூறி காதில் பூ வைத்து போராட்டக் காரர்கள் தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.
மைசூரு, மண்டியா, ராமநகர் மாவட்ட விவசாயிகளின் நலனை கருநாடக அரசு புறக்கணித்து வருவ தாக குற்றம்சாட்டினர்.
இதேபோல், பெங்களூருமைசூரு தேசிய நெடுஞ்சாலையிலும் பா.ஜனதா வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் டயர்களை கொளுத்திப்போட்டும், மாநில அரசின் உருவப்பொம்மையை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.
மேலும் பா.ஜனதாவினர் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் காவலர்களுக்கு, போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி விரைவுச்சாலை மற்றும் மண்டியா டவுனில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.