ரூ.1 லட்சம் கோடி வேண்டும் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க. மோடி அரசுக்கு சந்திரபாபு நெருக்கடி

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 7 18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மோடி மீண்டும் பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதில் தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் அதிக இடங்களுடன் (28) மோடியின் பிரதமர் இருக்கையை தாங்கி வருகின்றனர். இரண்டு கட்சிக ளும் பாஜகவிற்கான ஆதரவை திரும்பப் பெற்றால் மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால், தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் கட்சிகள் கூறுவதை கட்டாயம் கேட்க வேண்டும் என்ற சூழல் பாஜகவிற்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண்டும் என அம்மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு மோடி அரசிற்கு எதிரான நெருக்கடி ஆட்டத்தை துவங்கியுள்ளார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவி யேற்ற பின் முதன் முறையாக டில்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜ்நாத் சிங், 6 ஒன்றிய அமைச்சர்கள், 16ஆவது நிதிக் குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையில்,”ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பை உயர்த்தி புதிய கட்டுமானத்திற்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மூலதனம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி என்பது சாதாரண தொகை அல்ல என்பதால், இதனை மோடி அரசு வழங்குமா? இல்லை வழக் கம் போல பாஜக – தெலுங்கு தேசம் கட்சிகளிடையே மோதல் வெடிக்குமா? என்பது இனிமேல் தெரியவரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *