புதுடில்லி, ஜூலை 1- முறைகேடு புகார்கள் வெளியாகி இருப்பதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை இணைய வழி மூலம் நடத்த அரசு பரி சீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முறைகேடு புகார்கள்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த மே மாதம் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. இதில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அதிகமானோர் முழுமதிப்பெண் பெற்றதும், 1,500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மோசடி விவ காரத்தை அரசு சி.பி.அய்.யிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து விசாரணை தீவிரம் அடைந் திருக்கிறது. பல மாநிலங்களில் அடுத்தடுத்து கைது நட வடிக்கைகள் நடந்து வருகின்றன.
மேலும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை களை வழங்குவதற்காக இஸ்ரோ மேனாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 நபர் குழுவையும் ஒன்றிய அரசு அமைத்து உள்ளது. இந்த குழுவும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.
ஆன்லைன் முறை
இதற்கிடையே, மாண வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த முறைகேடுகளை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
நீட் தேர்வுகள் தற்போது எழுத்து தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. கொள்குறி வகை வினாக்களுக்கான சரியான விடைகளை ஓ.எம்.ஆர். தாள்களில் குறிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இதனால் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை இணைய வழி மூலம் நடத்தலாமா? என்று ஒன்றிய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அதற்கான சாத்தி யக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
தீவிர பிரிசீலனை
கடந்த காலங்களிலும் இணைய வழி மூலமான தேர்வுக்கு ஒன்றிய அரசு பரிசீலித்தது. நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை இணைய வழி மூலம் நடத்தப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
ஆனால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி சுகாதார அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த நடைமுறையில் இருந்து கல்வி அமைச்சகம் பின்வாங்கியது.
ஆனால் தற்போது முறைகேடு புகார்கள் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து இணைய வழி மூலமான தேர்வுக்கு சுகாதார அமைச்சகமும் தீவிரமாக பரிசீலிப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இணைய வழி மூலம் நடத்தப்படும் ஜே.இ.இ.போன்ற தேர்வுகளை கிராமப்புற மாணவர்களும் எழுதும் நிலையில், நீட் தேர்வும் அவ்வாறு நடத்தப்பட்டால் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு நேராது என்றும் அமைச்சகம் கருதுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது. இணைய வழி மூலமான தேர்வு முறைக்கு தேசிய மருத்துவ கவுன்சிலும் நேர்மறையான முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இணைய வழி தேர்வு முறை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.