முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை!

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 1- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ஆம்தேதி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்தப் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ‘மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழ்நாடு இளை ஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்’ என்று 2024-–2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் கட்டணமில்லா, உண்டு, உறைவிட பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கிப் பணி தேர்வு அல்லது மத்திய பணி யாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி பெற முடியும். இதற்கு 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவிருக்கின்றன.

இதில் ஆர்வமுள்ள மாண வர்கள் கடந்த மாதம் ஜூன் 8ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விண்ணப்பித் தனர். தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஜூலை 9ஆம் தேதி அன்று வெளியிடப்படவிருக்கிறது. இதற்கான தேர்வு ஜூலை 14ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகின்றன.

இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள், ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக ஒப்பந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் ஒன்றிய பணியாளர் தேர்வா ணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கும், மதுரை மற்றும் கோவை மய்யத்தில் வங்கிப் பணி தேர்விற்காக தலா 350 பேருக்கும் உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய இப்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *