போபால், ஜூன் 30 மத்திய பிரதேசத்தில் மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் பசு, காளை உட்பட 60 மாடுகளை கழுத்தை அறுத்து கொன்று வீசிச் சென்ற வழக்கில் 24 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 19, 20 தேதிகளில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி, காகர்த்தாலா உள்ளிட்ட இடங்களில் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. குறிப்பாக, சியோனி கிராமத்தில் ஆற்றங்கரை அருகே 18 மாடுகளும், காகர்த்தாலா காட்டுப் பகுதியில் 28 மாடுகளும் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தன. சுற்றுப் பகுதிகளில் இதே போன்று மாடுகள் கொல்லப்பட்டுக் கிடந்தன. இது குறித்து மத்தியபிரதேச காவல் துறை விசாரணையில் இறங்கியது.
இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் நாக்பூரைச் சேர்ந்தவர்கள். இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “மதமோதலைத் தூண்டும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாடுகளை கழுத்து அறுத்துகொலை செய்வதற்காக பணம்கொடுத்து ஆட்களை நியமித்துள்ளனர். சில உள்ளூர் மக்களும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.