மகாராட்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் அறிவித்துள்ளார்.
மகாராட்டிராவில் தற்போது பாஜக – ஷிண்டே (சிவசேனா) – அஜித் பவார் (என்சிபி) இடையேயான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மகாராட்டிரா மாநில கல்வி பாடத்திட்டத்தில் ‘மனுஸ்மிருதி’ வசனங்களை இடம்பெறச் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் மகாராட்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதன்பின்னர் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியில் இருந்து எந்த வசனமும் சேர்க்கப்படவில்லை. மாநிலத்தில் அப்படி எந்த முயற்சியும் செய்ய முடியாது. மனுஸ்மிருதியை மாநில அரசு ஆதரிக்கவில்லை.
மகாராட்டிரா மாநிலம் – சிவாஜி, மகாத்மா ஜோதிராவ் புலே, ஷாகுமகராஜ் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோர் பிறந்த பூமி இது. அவர்களின் முற்போக்கான சிந்தனைகளைச் செயல்படுத்துவதில் பெயர் பெற்றுள்ளது. எனவே மனுஸ்மிருதி போன்ற பிரச்சினைகளுக்கு மகாராட்டிராவில் இடமில்லை.
மனுஸ்மிருதி வசனங்களை சேர்க்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்” என்று அஜித் பவார் அறி வுறுத்தியுள்ளார்.
‘‘இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு’’ என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘’இந்தியா ஹிந்து நாடு அல்ல என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ‘ஆம்’ என பதிலளித்த சித்தராமையா, ‘’இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு’’ எனக் கூறினார்.
இந்த இரண்டு தகவல்களும் எதைக் காட்டுகின்றன? மனுதர்மத்தையும் ஹிந்து ராஜ்ஜியத்தையும் தூக்கிப் பிடித்து மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்ற நிலை உருவாவது வரவேற்கத்தக்கதே!
அதுவும் பிஜேபி, சிவசேனா (ஷிண்டே) அஜித் பவாரின் என்.சி.பி. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்றாலும் மனுதர்மத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் – பாடத் திட்டத்தில் சேர்க்க மாட்டோம் என்று சொல்லுகிறார்கள் என்றால் நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் கொடுத்த பாடத்தின் விளைவுதான்.
மோடியும், பா.ஜ.க.வும் ‘ஜெய்ராம்’ முழக்கத்தை விட்டு ‘ஜெய் ஜெகந்நாத்’ முழக்கம் போட ஆரம்பித்து விட்டனர். நடந்து முடிந்த தேர்த லில் படாடோபமாகக் கட்டப்பட்ட ராமன் கோயில் இருக்கும் அயோத்தியிலேயே பிஜேபி தோல்வியைத் தழுவி விட்டதே! பிரார்த்தனை என்ன விரதங்கள் என்ன – போட்ட வேஷங்கள் என்ன? இவையெல்லாம் கை கொடுக்கவில்லையே!
மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது புரியவில்லையா? கண்மூடி வழக்கமெல்லாம் மண் முடிப் போகட்டும்!