லக்னோ, ஜூன் 29 ‘‘செங்கோலை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவது போன்றது‘‘ என்று தமிழில் பதிவிட்டுள்ளார் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்,
செங்கோல் குறித்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில்,
‘‘இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியன மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
மோசடிக்கும்பலின் தலைவன் சந்தீப் முக்யா
நீட் தேர்வு வினாத்தாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்த மோசடிக்கும்பலின் தலைவன் சந்தீப் முக்யா உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் இத்தனை முறைகேடுகளையும் செய்தார்.
அவரது மகன், மருமகன் ஆகியோர் நீட் தேர்வு எழுதி தேர்வாகி இன்று மருத்துவர்களாகவும் உள்ளனர்.
நீட் முறைகேட்டினால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 3.7 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத சாமியார் முதலமைச்சர் தடாலடியாக செங்கோலுக்கு தமிழில் பதிவிடுகிறார்.