‘நீட்’ பிரச்சினை: அகில இந்திய அளவில் கொண்டு செல்லும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் நீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி

2 Min Read

8 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 29- நீட்டை ஒழித்திட அடுத்தகட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 8 மாநில சட்டப் பேரவைகளிலும் நீட்டை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றுமாறு அம்மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில், மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுமாறு டில்லி, கருநாடகா, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

எட்டு மாநில
முதலமைச்சர்களுக்கு கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டில்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கருநாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு நேற்று (28.6.2024) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் வாழ்நாள் விருப்பங்கள் தொடர்பான ஒரு முக்கிய மான பிரச்சினை குறித்து உங்களின் கவனத்துக்கு கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீட் தேர்வின்போது நடந்த முறைகேடுகள் குறித்த சமீபத்திய பல்வேறு செய்திகள், தேசிய தேர்வு முகமையின் பலவீனங்களை வெளிப்படுத்துகிறது.
நீட் தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் சிதறடித்துள்ளது நீட்தேர்வை அதன் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சட்டமன்றத்தில் தீர்மானம்
‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிகமான பயிற்சிக் கட்டணங்களை செலவிட முடியாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலேயே நாங்கள் தொடர்ந்து ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு ‘நீட்’தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்கக் கோரியும் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுகளில் நடை பெறும் பல்வேறு முறைகேடுகளை கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ‘நீட்’ முறையை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ய வேண்டும்.
ஆகவே, இந்த பிரச்சினையின் முக்கியத்து வத்தையும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த, உங்கள் மாநில சட்டமன்றத்திலும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *