சென்னை, ஜூன் 24- ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச.வின் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “ஆவடி திண் ஊர்தித் தொழிலகம், ‘Fixed Term’ வேலைவாய்ப்பில், தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்” என்று குறிப் பிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:–
‘பிக்ஸ்டு டர்ம்’ வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் 4 வருடத்திற்கு டெக்னிக்கல் காண்ட்ராக்ட் எடுக்க எச்விஎப் நிர்வாகம் 18.6.2024 அன்று விளம்பரம் அளித்துள்ளது.
வாடகைக்கு அமர்ந்து – துரத்து (ஹேர் மற்றும் பேர்) என்ற கார்ப்பரேட் சித்தாந்தத்தின் அடிப்படையிலும், ஒன்றிய அரசின் ‘அக்னிவீர்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும் எச்விஎப் நிர்வாகம் இந்த டெக்னிக்கல் காண்ட்ராக்டை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் இந்தத் திட்டத்தில் எள்ளளவும் நமது எச்வி.எப் தொ.மு.ச.வுக்கு நம்பிக்கை இல்லை.
மேலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி விளம்பரப் படுத்தி உள்ளது, “குரங்கு அப்பம் பிட்ட கதையாக உள்ளது” இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உதாரணத்திற்கு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட ‘ அரிய வகை ஏழைகளுக்கான (இடபிள்யூஎஸ்) இட ஒதுக்கீடானது இன்று வரை தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ஆவடி எச்விஎப் ஆனது, ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்குப் பின்பற்றும் இட ஒதுக்கீடான 19: 1 : 21 (எஸ்.சி : எஸ்.டி.: ஒ.பி.சி.) என்ற இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல், இ.டபிள்யூ.எஸ். என்ற புதிய இட ஒதுக்கீட்டைப் புகுத்தியும் ஒரு எஸ்.டி. தொழிலாளிக்கு கூட இட ஒதுக்கீடு தராமல் விளம்பரம் செய்துள்ளது இளைஞர்களுக்கு செய்யும் துரோகமாகவே எச்விஎப் தொ.மு.ச. கருதுகிறது.
ஆகவே தமிழ்நாடு இட ஒதுக்கீட்டின்படி எச்விஎப் நிர்வாகம் ‘பிக்ஸ்டு டர்ம்’ வேலைவாய்ப்பு விளம்ப ரத்தை திருத்தி விளம்பரம் செய்ய வேண்டும் என்றும், அந்த இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்றும் எச்விஎப் தொ.மு.ச. கேட்டுக்கொள்கிறது. – இவ்வாறு, டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.