சென்னை, ஜூன் 24- காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
‘மேனாள் முதலமைச்சர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பள்ளிகளில் விழா எடுத்து காமராசர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15ஆம் தேதியன்று அனைத்துவித பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தினவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், காமராசரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஒவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
இதற்கான செலவினங்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இதுதவிர மாணவர் சேர்க்கை, கற்பிக்கும் திறன் உட்பட பல்வேறு அம்சங்களின்படி சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படும். அவற்றை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புரசைவாக்கம்- கெல்லீஸ் இடையே மெட்ரோ சுரங்கப்பாதைப் பணிகள்
அடுத்த மாதம் தொடக்கம்!
சென்னை, ஜூன் 24- புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ஜூலையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3ஆவது வழித்தடமும் ஒன்று. 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 18 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி புரசைவாக்கத்தில் ஜூலையில் தொடங்கதிட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, புரசைவாக்கம் – கெல்லீஸ் நோக்கிசுரங்கப்பாதை பணி நடைபெறவுள்ளது. புரசைவாக்கத்தில் சுரங்கப்பாதை பணியை தொடங்க அடிப்படை பணிகள் முடிந்துவிட்டன. இங்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டும்.
எனவே, சுரங்கம் தோண்டும் இயந்திரம் கெல்லீஸ் மெட்ரோ நிலையத்தை அடைய அதிக நேரம் எடுக்காது. மேலும், சுரங்கம் தோண்டும் பணி சரியான நேரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
– இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான 925 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது, குறிப்பிடத்தக்கது.