புதுடில்லி, ஜூன் 24- மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான பாஜகவின் பா்த்ருஹரி மகதாப் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
அதேநேரம், மக்களவை இடைக்கால தலைவா் பதவிக்கு கேரளத்தைச் சோ்ந்த 8 முறை காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் புறக்கணித்து விட்டதாக, ஒன்றிய அரசை காங்கிரஸ் விமா்சித்தது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதால், அவா் புறக் கணிக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (24.6.2024) காலை மக்களவையின் 18ஆவது கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கைகளில் அரசமைப்பு சட்டப் புத்தகத்தை ஏந்தியபடி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.