சென்னை, ஜூன் 23– தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சோதனைசெய்த 84 இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த 808 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்அதன்படி புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 84 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் 876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 84 இடங்களில் நடத்திய சோதனையில் 3000 லிட்டர் சாராயம், 12000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 808 பேர் கைது செய்துள்ள நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.